காவிரி பிரச்சனை உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கர்நாடகத்தின் இனவெறி அரசியலுக்குக் கண்டனம்!

காவிரி பிரச்சனை
உச்சநீதிமன்றத் தீர்ப்பு : 
கர்நாடகத்தின் இனவெறி அரசியலுக்குக் கண்டனம்! 
 
தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்! 
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
 
 

காவிரியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் பத்து நாட்களுக்குத் தண்ணீர்  திறந்துவிடவேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை அங்கீகரித்துள்ளது என்றபோதிலும், தமிழகத்துக்கு சட்டப்படி சேரவேண்டிய தண்ணீரில் அது கால்வாசிகூட இல்லை. இந்தத் தண்ணீரைக்கொண்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நாற்பதாயிரம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாது. இந்தத் தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் இந்தத் தண்ணீரைக்கூடத் தரக்கூடாது என கன்னட இனவெறி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கர்நாடக பந்த்துக்கும் அழைப்புவிடுத்துள்ளன. இந்த இனவெறிப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் தரவேண்டிய நீரின் அளவை காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாடுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த அட்டவணைப்படி இதுவரை ஓர் ஆண்டில்கூட கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதில்லை.  

ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை தமிழகத்துக்கு 134 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த அளவைக்கூட வலியுறுத்தாமல் சம்பா பயிரைக் காப்பாற்ற வெறும் 50.52 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. உச்சநீதிமன்றமும் ‘வாழு வாழ விடு’ என்று கர்நாடக அரசைக் கடிந்துகொண்டது. உயிர்ப்பிச்சை போடுவதுபோல் 13 டிஎம்சி தண்ணீர் தர ஆணையிட்டது. ஆனால் காவிரி நடுவர் மன்ற உத்தரவையோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பையோ மதிக்காமல் இனவெறி நெருப்பில் குளிர்காய கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். 

உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து கர்நாடக அரசு இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்ட 13 டிஎம்சி தண்ணீரைக்கூட கர்நாடகம் தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில் அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகுறித்து ஒருமித்த முடிவை மேற்கொள்ளும்வகையில் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்
தொல். திருமாவளவன் 


0 comments:

கருத்துரையிடுக