மாநில செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 
மாநில செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

சென்னை, மறைமலை நகரில் 12-10-2013 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானங்கள்

1.  வீரவணக்கம்
ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த தோழர்கள் சான் தாமசு, ஏழுமலை உள்ளிட்ட சாதிஒழிப்புப் போராளிகளுக்கும், அண்மையில் காலமான அரியலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பெ.திருமாவளவன் அவர்களுக்கும் இச்செயற்குழு வீரவணக்கம் செலுத்துகிறது. அவர்களது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் உறுதியேற்கிறது.

2. மண்ணுரிமை வாரம்
பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் நடவடிக்கைகள் தொடராமல் போனதால் இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமான இலட்சக் கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலம் பிறருடைய ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.  அவற்றை மீட்டெடுக்கவும் ஒடுக்கப்பட்டோர் மண்ணுரிமையை நிலைநாட்டிடவும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தை 'மண்ணுரிமை வாரம்' எனக் கடைப்பிடித்து மக்களிடையே பரப்புரை மேற்கொள்வதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

3. பீகார் அரசுக்குக் கண்டனம்
பீகார் மாநிலத்தில் அதிக்க சாதியினரின் கொலைப்படையான ரண்வீர் சேனா என்ற அமைப்பால் இலட்சுமண்பூர்பதே என்ற கிராமத்தில் 1997ஆம் ஆண்டு தலித்துகள் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  அந்த வழக்கில் அமர்வு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் எனத் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் இப்போது பாட்னா உயர்நீதிமன்றம் விடுவித்துவிட்டது.  இது பீகாரை ஆளும் நிதீஷ்குமார் தலைமையிலான அரசின் தலித் விரோதப் போக்கின் விளைவாகும்.  ரண்வீர் சேனா கொலையாளிகளைத் தப்பவிட்ட பீகார் மாநில அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அங்கேயாவது குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டுமென பீகார் அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

4. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துக
தலித் மக்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உரிய விதத்தில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு அந்தச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.  அதில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை உள்ளடக்கி புதிய மசோதா தயாரிக்கப்பட்டு பல மாதங்களான பிறகும்கூட அதைச் சட்டமாக நிறைவேற்றாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.  வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுப்படுத்த உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

5. பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுக
தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது.  மண்டல் குழு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின்போது, அதற்குத் தடை விதிக்கப்பட்டது.  நீதிமன்றத் தீர்ப்புகளால் பறிக்கப்பட்ட அந்த உரிமையை மீட்டெடுக்கும் விதமாக மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட போதும், மக்களவையில் நிறைவேறவிடாமல் சமாஜ்வாடி கட்சி தடுத்துவிட்டது.  தலித் மக்களின் உரிமைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இச்செயற்குழு கண்டிக்கிறது.  மக்களவையிலும் அந்தச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

6. தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் - உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திருத்துக.
இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறிக்கவும், அவர்கள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாமல் செய்யவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இது இயற்கை நீதிக்கு முரணானதாகும்; சட்டம் வழங்கியுள்ள மேல் முறையீட்டு உரிமையை மறுப்பதாகும்.  அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்; அதற்கென சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம், கோஸ்வாமி குழு, இந்திரஜித் குப்தா குழு உள்ளிட்ட பல அமைப்புகள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.  தற்போதுள்ள தேர்தல் முறைக்கு மாற்றாக, விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகளும் பேசி வருகின்றன.  இவற்றையெல்லாம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு கவனத்தில் கொள்ளவில்லை.  தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, தலித் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்யும் நோக்கில் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திருத்தும் நோக்கில், அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டமசோதாவை திரும்பப் பெறக்கூடாது எனவும், அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

7. சாதிவெறியர்களைக் கட்டுப்படுத்துக
தமிழ்நாட்டில் சாதிவெறியர்கள் மீண்டும் வெளிப்படையாக அணி சேர்ந்திருப்பது இங்குள்ள சனநாயக சக்திகளுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.  வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.  அதை இப்போதே தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் கடமையாகும்.  சாதியவாத சக்திகள் மீது தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை இச்செயற்குழு பாராட்டுகிறது.  அதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது. தலித் மக்களுக்கு மட்டுமின்றி நாட்டின் சனநாயக நெறிமுறைகளுக்கும், அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்ற சாதிய சக்திகளைப் புறக்கணிக்க வேண்டுமென அனைத்துச் சனநாயக சக்திகளையும் இச்செயற்குழு அறைகூவி அழைக்கிறது.

8. தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக. 
தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசோ, மெத்தனம் காட்டுகிறது.  எல்லைப் புறத்தில் இராணுவ வீரர்களின் மீதான தாக்குதல் எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான சவாலாகக் கருதப்படுகிறதோ அதுபோன்றே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலும் இந்திய இறையாண்மைக்கு எதிரான சவாலாகவே கருதப்பட வேண்டும்.  தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு அவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான பயிற்சியும் சாதனங்களும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது
2013 நவம்பரில் இலங்கையில்  நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு.  இதை வலியுறுத்தி முதலில் அறிக்கை வெளியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான்.  தற்போது இக்கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகு அவர்களுக்கு இச்செயற்குழு தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.  காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்திய அரசுக்கு அழுத்தம் தரும் விதமாக தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் போராட முன்வரவேண்டுமென இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.

10. ஏற்காடு இடைத்தேர்தல் - திமுகவுக்கு ஆதரவு
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.  அந்த வேண்டுகோளை ஏற்று திமுக வேட்பாளரை ஆதரிப்பது எனவும், அவரது வெற்றிக்கு அயராது தேர்தல் பணியாற்றுவது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.  இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி பெறுவதே அண்மைக்கால நடைமுறையாகிவிட்டது.  எனினும், ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது ஆளும் அதிமுக ஆட்சிக்கு ஒரு அறிவுறுத்தலாக அமையும்.  ஆகவே, இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமாறு ஏற்காடு தொகுதி மக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

11. மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் யாவும் தயாராகி வருகின்றன. பாரதிய சனதா கட்சி, தனது பிரதமர் வேட்பாளராக திரு. நரேந்திரமோடியை அறிவித்துள்ளதையடுத்து இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையிலான போட்டியாக உருவெடுத்திருக்கிறது. மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், அது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல சனநாயக சக்திகள் அனைவருக்குமே ஆபத்தாகிவிடும்.  நாட்டை மதவாத ஆபத்திலிருந்து பாதுகாப்பது இன்று முதன்மையான கடமையாக உள்ளது. எனவே, மதவாத சக்திகளுக்கு எதிராக இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டுமென இச்செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.