சட்ட மசோதாக்களை தமிழிலேயே உருவாக்கவேண்டும்

சட்ட மசோதாக்களை தமிழிலேயே உருவாக்கவேண்டும் 
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் 

தமிழக அரசு சார்பில் கொண்டுவரப்படும் சட்டங்களுக்கான மசோதாக்களை தமிழிலேயே உருவாக்கவேண்டும் அதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத்  தமிழை அறிவிக்கவேண்டும் என நீண்டகாலமாகத்  தமிழக அரசியல் கட்சிகள்  குரல் எழுப்பி வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் இதற்காக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.இதற்காக வழக்கறிஞர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வழக்காடுமொழியாகத் தமிழ் சிறப்பாகப் பயன்படவேண்டுமென்றால் தமிழில் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இதுநாள்வரை தமிழகத்தில் இயற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயேதான் இயற்றப்பட்டுவருகின்றன. இனிமேலாவது அந்த நிலை மாற்றப்படவேண்டும். ஆங்கிலத்தில்தான் சட்டங்களை உருவாக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லாத நிலையில் காலனிகால நடைமுறையையே நாம் பின்பற்றிக்கொண்டிருக்கத் தேவையில்லை. தமிழில் சட்டங்களை உருவாக்கினால் அது மக்களுக்கும் எளிதாகப் புரியும், வழக்கறிஞர்களும் நன்றாக வாதிட முடியும்.

தமிழைப் பயன்பாட்டு மொழியாக வளர்த்தெடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும். எனவே தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தற்போது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதற்கான அறிவிப்பை இந்தக் கூட்டத் தொடரிலேயே வெளியிடுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டுகிறேன்.இந்தக் கோரிக்கையின் தேவையை உணர்ந்து தமிழகத்திலிருக்கும் பிற அரசியல்கட்சிகளும் இதை வலியுறுத்துமாறு கெட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்