ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையை ஈடேற்றுங்கள்!
ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையை ஈடேற்றுங்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தொல். திருமாவளவன் வாழ்த்து
இலங்கையில் நடைபெற்ற வடக்கு மாகாணத்துக்கான தேர்தலில் எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 36 இடங்களில் 30 இடங்களை அது வென்றிருக்கிறது.வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் முன்னாள் நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் சர்வதேச நிர்ப்பந்தங்களின் காரணமாகவே நடத்தப்பட்டது. தேர்தலை அறிவித்தாலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்கும் விதமாகப் பல்வேறு இடையூறுகளை இலங்கை அரசு செய்துவந்தது. த.தே.கூ வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என மிரட்டல் விடுத்து சுவரொட்டிகளை ராணுவமே ஒட்டியது. த.தே.கூ வேட்பாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர். குறிப்பாக அனந்தி எழிலன் அவர்களைக் கொலை செய்யும் நோக்கோடு பலமுறை ராணுவத்தினரும், ராஜபக்சேவுக்குச் சார்பான ஒட்டுக் குழுவினரும் கொலைவெறித் தாக்குதல்களை மேற்கொண்டனர். அவரது வீடு ராணுவத்தினரால் அடித்து நொறுக்கப்பட்டு அங்கிருந்த பத்து பேர் பலத்த காயமடந்தனர். தேர்தல் பார்வையாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர். வாக்குப் பதிவு நாளன்று மக்களை குழப்பும் நோக்கோடு உதயன் நாளேடு என்ற பெயரில் போலி நாளேட்டை அச்சடித்துப் பரப்பினார்கள். தமிழர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அனுமதித்திருந்தால் வாக்குப் பதிவு 90 விழுக்காட்டைத் தொட்டிருக்கும். ஆனாலும், தமிழ் மக்கள் தமது கருத்து என்ன என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்குப் பணியமாட்டோம் எனத் துணிச்சலோடு அறிவித்துவிட்டனர். அதிகாரப் பகிர்வுக்கான அவர்களது வீரம் செறிந்த போராட்டத்தில் இதுவொரு முக்கியமான நிகழ்வாகும்.
சுதந்திரமாகத் தேர்தலை நடத்திவிட்டோம் என சர்வதேசத்தை நம்பவைத்து தம் மீதான அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ராஜபக்ச அரசு முயற்சிக்கும். அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கக்கூடாது. தமிழ் மக்கள் தமக்களித்திருக்கும் இந்த மக்த்தான ஆதரவைப் பயன்படுத்தி இலங்கை அரசின்மீதான சர்வதேச நெருக்குதல்களை அது அதிகரிக்கச் செய்யவேண்டும். 25 ஆம் தேதி நவநீதம் பிள்ளை அவர்கள் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து வாய்மொழி அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில் த.தே.கூ வின் பணி அவசர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் அவர்கள் வெளிப்படுத்திவிட்டனர். அந்த ஒற்றுமையை முன்னோக்கி எடுத்துச் செல்வது த.தே.கூ வின் முன்னால் உள்ள சவால் ஆகும். குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாண மக்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தியாகவேண்டும்.அதற்கு த.தே.கூ முன்முயற்சி எடுக்கவேண்டும். முஸ்லிம் அமைப்புகளும் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத் தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என அறிக்கை விடுத்த ஒரே தமிழக அரசியல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். திரு.விக்னேஸ்வரன் அவர்களது கருத்தை முன்வைத்து தாய்த் தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்களுக்குமிடையே பிளவு உண்டாக்க முயற்சிகள் நடைபெற்றபோது அதற்குப் பலியாகாமல் தமிழர்களின் ஒற்றுமையை மனதில்கொண்டே அந்த வேண்டுகோளை நாங்கள் முன்வைத்தோம். இனியும் கூட அதே தொலைநோக்கோடுதான் இந்தப் பிரச்சனையை விடுதலைச் சிறுத்தைகள் அணுகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவண்
தொல்.திருமாவளவன்