காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது! - விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் - தொல்.திருமாவளவன் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறுக!
கச்சத்தீவை இந்தியாவுக்குச் சொந்தமானதல்ல என்று கூறிய மைய அரசுக்குக் கண்டனம்!
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது!
விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் அறிவிப்பு
பெட்ரோல்-டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறுக
மாதத்திற்கு ஒரு முறை, இரு முறை என இருந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இப்போது தினசரி நடைமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. விலை உயர்த்தப்படுவதற்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டு வருகிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை இப்போது காரணமாகக் கூறியிருக்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படுவதால் ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒருபுறம் உணவுப் பாதுகாப்பு மசோதா என்கிற பெயரில் ஏழை நடுத்தர மக்களை பாதுகாப்பதாக நாடகமாடும் மத்திய அரசு, இன்னொரு புறம் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி அவர்களை ஓட்டாண்டிகளாக்கி வருகிறது. ஏழை மக்களால் தாங்க முடியாத அளவுக்கு பொருளாதாரச் சுமையைச் சுமத்துகின்ற பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். முன்பு இருந்ததைப் போல அதை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கச்சத் தீவைத் திரும்பப் பெறுக
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவு தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. நமக்குச் சொந்தமான நிலப் பகுதியை இன்னொரு நாட்டிற்குத் தர வேண்டுமானால் அதற்கு மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும். கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஒப்பந்தம் அத்தகைய ஒப்புதலைப் பெறவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத எந்தவொரு சர்வதேச ஒப்பந்தமும் செல்லத்தக்கதல்ல. எனவே, சட்டரீதியாகப் பார்த்தால் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பிலும் டெசோ அமைப்பின் சார்பிலும் கச்சத்தீவை மீட்டுத் தருமாறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம், அதைத் திரும்பப் பெற இயலாது எனக் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதற்கேற்ப திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்
இலட்சக் கணக்கான தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இராஜபக்சே அரசு உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப் பிறகும்கூட போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதற்கோ முன்வரவில்லை. அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்கள், ''இலங்கை மேலும் மேலும் ஒரு அதிகாரத்துவ அரசாகவே மாறி வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இராஜபக்சே அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதில் கலந்துகொள்ளக் கூடாது என இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களும் அதையே வலியுறுத்தி வருகிறார்கள். எனவே, இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். தமது நிலையை மத்திய அரசு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 7-9-2013 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சார்பாக சென்னையில் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையிலும், 12-9-2013 அன்று பிற மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்