ஈழ அகதிகள் மூவரை நாடு கடத்தும் முடிவைக் கைவிடுக!

ஈழ அகதிகள் மூவரை 
நாடு கடத்தும் முடிவைக் கைவிடுக!

இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஈழத் தமிழர்கள் மூன்று பேரை தமிழகத்திலிருந்து வெளியேற்றி இலங்கைக்கு அனுப்பும்படி இந்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.  செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய மூவரையும் உடனடியாக நாடு கடத்தப் போவதாக தமிழக காவல்துறையைச் சார்ந்த கியூ பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  

இம்மூவரும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்து அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.  இவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ வழக்குகளோ ஏதுமில்லை.  ஈழத் தமிழர்களின் சனநாயக உரிமைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து அறவழியில் அமைதி வழியில் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்துவதால் காவல்துறை இவர்களை பொய்வழக்குகளில் கைது செய்வதுண்டு.  மற்றபடி கிரிமினல் வழக்குகள் ஏதும் அவர்கள் மீது இதுவரை பதிவானதில்லை.  அரசியல்ரீதியான உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதனாலேயே இவர்களை உளவுத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதுண்டு. ஈழத் தமிழர்களிடையே, குறிப்பாக அகதிகள் முகாம்களில் வாழும் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதும், அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதும்தான் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது.  இதனாலேயே இவர்களுக்கு எதிரான சதி வேலைகளில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.  இதற்கு இந்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும், குறிப்பாக காவல்துறையும் காரணமாகும். 

இம்மூவரையும் இந்திய அரசு நாடு கடத்தினால், கொழும்பு சென்று இறங்கியதும் சிங்கள இனவெறியாளர்களால் இவர்களுக்கு பெரும் ஆபத்து உள்ளது.  இத்தகைய ஆபத்தான நிலை இருக்கிறது என்று அறிந்திருந்தும் இவர்களை நாடு கடத்த முடிவு செய்திருப்பது மிக வன்மையான கண்டனத்துக்குரியதும் மனிதநேயத்திற்கு எதிரானதுமாகும்.  குறிப்பிட்ட இந்த மூன்று பேரும் சட்டத்திற்கு விரோதமாகவோ தேசத்திற்கு விரோதமாகவோ செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர நாடு கடத்த முடிவு செய்வது அகதிகளுக்கான உரிமைகளை மீறுவதாகும்.  அதனாலேயே இந்திய அரசு சர்வதேச அகதிகள் உரிமைகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் நீண்ட நாள் கையெழுத்திடாமல் புறந்தள்ளி வருகிறது.  அகதிகளின் உரிமைகளை நசுக்குவதற்கென்றே ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்திய அரசு அலட்சியப்படுத்துவதாகத் தெரிகிறது.

ஆகவே, உடனடியாக அகதிகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்று இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.  எந்தவிதக் குற்றச்செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி தமிழ் இளைஞர்கள் செந்தூரன், ஈழநேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய மூவரையும் நாடு கடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.  தமிழக அரசும் இம்முயற்சியைக் கைவிட வலியுறுத்தி இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்