எழுச்சித்தமிழர் திருமாவின் ரமலான் பெருநாள் வாழ்த்து
சாதிய, மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை மேலோங்க விடாமல் தடுத்து நிறுத்த சனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கிணைய உறுதியேற்போம்.
இசுலாமியப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எமது இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமூகத்தில் நல்லிணக்கத்தையும் சர்வதேச அளவில் பொது அமைதியையும் வலியறுத்தும் ஒரு மகத்தான வாழ்க்கை முறையே இசுலாம் ஆகும். வன்முறைகளின்றி பேதங்களின்றி வாழ்வதுதான் மனிதகுலத்தின் வெற்றிகரமான வாழ்க்கையாக அமையும். அதற்கு தனிமனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஒருவரையொருவர் ஏய்த்துப் பிழைக்கும் வாழ்க்கை முறை தவிர்க்கப்பட வேண்டும். எளியோர், வலியோர் என்கிற வேறுபாடில்லாமல் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் அதன்வழி மனிதநேயத்தைப் பேணவும் வேண்டும். இத்தகு வாழ்வியல் நெறிமுறைகளை இந்த மண்ணுலகுக்கு வழங்கிய மகான்களில் ஒருவர்தான் நபிகள் நாயகம் ஆவார். அவருடைய வழியில் இசுலாத்தைப் போற்றும் இசுலாமியப் பெருங்குடி மக்கள் வருடத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்து தனி மனித ஒழுக்கத்தையும் சமூக ஒழுக்கத்தையும் பேணி வருகின்றனர். ரமலான் மாதம் முழுவதும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நோன்பினைக் கடைப்பிடித்து அதனை நிறைவு செய்த பின்னர் இசுலாமியர்கள் கொண்டாடும் திருநாள்தான் ரம்ஜான் பண்டிகை எனும் பெருநாளாகும்.
இந்த இனிய நன்நாளில் இசுலாமியர்கள் மட்டுமின்றி அனைத்து சமூதாயத்தினரும் சமூகத்தில் பொது அமைதியை நிலைநாட்டுவோம். குறிப்பாக இந்தியாவில் சாதிய, மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை மேலோங்க விடாமல் தடுத்து நிறுத்த சனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கிணைய உறுதியேற்போம்.
இசுலாமியப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எமது இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி