கல்விக்கடன் - மாணவர்கள் அவமதிப்பு வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கல்விக்கடன் - மாணவர்கள் அவமதிப்பு
வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் அக்கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்று பாரத ஸ்டேட் வங்கியினர் அம்மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரத் தட்டிகளில் அச்சிட்டு பொது இடங்களில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்தச் செயல் மிகவும் அருவறுப்பானதும் கடும் கண்டனத்துக்குரியதுமாகும்.
கல்வியை வணிகமயமாக்கி காசுக்கு விற்பனை செய்யும் கேவலம் அண்மைக்காலமாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதாவது, கல்வி தனியார்மயமாக்கப்பட்டதனால், பண முதலைகள் கல்வித்துறையில் பெரும் முதலீடுகளைச் செய்து வெளிப்படையாகக் கொள்ளையடித்து வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கோ முறைப்படுத்துவதற்கோ மத்திய, மாநில அரசுகள் எந்த வகையிலும் முனைப்புக் காட்டவில்லை. மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் தனியாரின் கையில் சிக்கிக் கொண்ட நிலையில் கல்விச் சரக்கின் விலையை அவர்களே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் இனி வருங்காலங்களில் உயர் கல்வியைப் பெறவே முடியாது என்னும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக, நன்றாகப் படிக்கும் திறனுள்ள மாணவர்கள் தமது படிப்பைத் தொடருவதற்கு இயலாத வகையில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், இத்தகைய ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி தேசிய வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் சனநாயக சக்திகளுக்கும் தொடர்ந்து போராடியதன் விளைவாக இந்திய அரசு அதற்குரிய ஏற்பாடுகளை அறிவித்தது. அதனடிப்படையில், கடுமையான முயற்சிகளின் மூலம் அல்லது பரிந்துரைகளின் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் தேசிய வங்கிகளில் ஓரளவு கடனுதவி பெற்று வருகின்றனர். அதனைப் படிக்கும் காலத்திலேயே அல்லது படித்து முடித்தவுடனேயே திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகங்கள் அத்தகைய மாணவர்களின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. வேலைவாய்ப்பு இல்லாத மாணவர்களால் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை உள்ளது. அவர்களின் பொருளாதார நிலையை அறிந்த பின்னரும், அவர்களை நெருக்குவதை வங்கி நிர்வாகங்கள் தொடரவே செய்கின்றன. அத்தகைய நடவடிக்கைகளின் உச்சமாகவே தற்போது கிரிமினல் குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதுபோல மாணவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கும் மிகக் கேவலமான இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரும் முதலாளிகள், கோடிக் கணக்கில் வங்கிகளுக்குத் திருப்பிச்செலுத்தாதபோது, அவற்றை வாராக்கடன்களாக அறிவித்து அவற்றை முழுமையாக அல்லது சலுகை அடிப்படையில் தள்ளுபடி செய்யும் இந்திய அரசு மாணவர்களின் கல்விக் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்