ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில் நான் கையெழுத்திட்டேன் : திருமா பேட்டி
நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க கூடாது என்று இந்திய எம்.பி.க்கள் 65 பேர் கையெழுத்திட்ட கடிதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டியிருப்பதாக கூறப்படும் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி, தி.மு.க. எம்.பி. கே.பி. ராமலிங்கம் உள்பட 12 எம்.பி.க்கள் தாங்கள் கையெழுத்து போடவில்லை என்று மறுத்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடிதத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் கையெழுத்து போட்டுள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:– குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன. அதை அடிப்படையாக வைத்து இந்தியாவிலும் எம்.பி.க்களிடையே கையெழுத்து வாங்கும் முயற்சி நடந்தது. கடந்த 18–12–2012 அன்று நான் பாராளுமன்றத்தில் இருந்தபோது கையெழுத்து வாங்கினார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட சில எம்.பி.க்கள் அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டனர். அதில் நானும் கையெழுத்து போட்டேன். அதில் இருப்பது என்னுடைய கையெழுத்துதான். இந்த மாதிரி தடை விதிப்பதற்கான தார்மீக தகுதி அமெரிக்காவுக்கு கிடையாது. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது இந்த மாதிரி முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை. அமெரிக்க அரசும் இலங்கை அதிபருக்கு வரவேற்பு அளித்தது. இருந்தாலும் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்பது வரவேற்க கூடிய ஒன்று என்பதால் நானும் கையெழுத்து போட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.