பா.ஜ.க மாநிலச் செயலாளர் ‘ஆடிட்டர்’வி.ரமேஷ் படுகொலை தொல்.திருமாவளவன் கண்டனம்!


பா.ஜ.க மாநிலச் செயலாளர் ‘ஆடிட்டர்’வி.ரமேஷ் படுகொலை

தொல்.திருமாவளவன் கண்டனம்!

அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தல்!



பா.ஜ.க வின் மாநிலப் பொதுச்செயலாளர் ‘ஆடிட்டர்’ வி.ரமேஷ் சேலத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். எவரோடும் தனிப்பட்ட பகை இல்லாதவரெனவும் , அனைத்து சமூகத்தினரின் நன்மதிப்பைப் பெற்றவரெனவும் சொல்லப்படும் திரு ரமேஷ் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் படுகொலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் அரசியல் பிரமுகர்கள் பலர் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். 2012 ஆம் ஆண்டில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், பாஜக மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த ஆண்டு தி.மு.க பிரமுகர் பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இப்படியான அரசியல் கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும். எனவே அரசியல் தலைவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.




தமிழகத்தில் காவலர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாகவே இருக்கிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம்,கர்னாடகா ஆகியவற்றில் இருப்பதைக்காட்டிலும் தமிழ்நாட்டில் பொதுமக்கள் போலிஸ் விகிதாச்சாரம் அதிகம். ஆனால் 2011 ஆம் ஆண்டைவிட 2012 ஆம் ஆண்டில் கொலை வழக்குகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையம் கூறியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் 1877 கொலை வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில் அது 1949 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஆந்திராவில் கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


கர்நாடகாவிலும் தமிழகத்தைவிடக் குறைவாகவே கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, போதுமான காவலர்கள் இல்லாததால் தான் குற்ற எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற காரணத்தை நாம் சொல்ல முடியாது. சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் சமூகத்தில் பிரிவினையைத் தூண்டி வன்முறையை விதைப்போரை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. அது மாநிலத்தின் அமைதியைக் கெடுப்பது மட்டுமின்றி முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டையாகிவிடும். எனவே இத்தகைய வன்செயல்களைத் தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

தொல்.திருமாவளவன்