மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு ரத்து! உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு

மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு ரத்து!  
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு
தமிழகத்தில் இளநிலைக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தவும் வலியுறுத்தல்!


இந்தியா முழுமைக்கும் மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்திருந்தது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் அந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. மாநில உரிமையைப் பறிக்கும் அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனத் தமிழக அரசும் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் மருத்துவ கவுன்சிலின் அந்த அறிவிப்பை இப்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.  உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கிறேன். 

ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகள் தமக்கான நுழைவுத்தேர்வை நடத்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது பல்வேறு முறைகேடுகள் தொடர வழிவகுக்கும் எனக் கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  அதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

’ப்ளஸ் டூ ’தேர்வு மதிப்பெண்களைக்கொண்டு மருத்துவப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கும் தற்போதைய முறையை எந்தக் குறையும் இல்லாதது எனச் சொல்ல முடியாது. தனியார் பள்ளிகள் பல ப்ளஸ் டூ படிப்பின் இரண்டு ஆண்டுகளிலும் 12 ஆம் வகுப்புக்கான பாடத்தையே நடத்தி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்களை வாங்க வைப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதைத் தடுக்க 11 ஆம் வகுப்பிலும் பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுவருகிறது. ஆனால் மேனிலைக் கல்வியின் தரத்தை உயர்த்த அதுவும் போதுமானதல்ல. அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல ப்ளஸ் டூ படிப்பை பள்ளிக்கல்வியிலிருந்து பிரித்து தனியே இளநிலைக் கல்லூரிகள் (ஜூனியர் காலேஜ்) என உருவாக்கவேண்டும்.

ஏற்கனவே 11+1+3 என்ற கல்வி முறை இருந்தபோது புகுமுக வகுப்பு என்பது கல்லூரியின் அங்கமாகத்தான் இருந்தது.புகுமுக வகுப்பில் பயின்றவர்கள் ஆய்வகங்கள், விரிவுரையாளர்கள், நூலகங்கள் உட்பட கல்லூரியின் அனைத்து வசதிகளையும் பெற்றனர். ஆனால்  ப்ளஸ் டூ முறை வந்தபோது அது பள்ளிக்கல்வியின் அங்கமாக மாற்றப்பட்டது. இப்போதுள்ள முறையால் மேனிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் தம்மைப் பள்ளி மாணவர்களாகவே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது உளவியல் ரீதியில் அவர்கள் தம்மைக் குறைவாகக் கருதிக்கொள்ள வழிவகுக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் ஆய்வக, நூலக வசதிகளும் போதுமானவையாக இல்லை.இதனால்தான் அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நமது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் போதுமான அளவில் வெற்றிபெற முடியவில்லை.

எனவே, தமிழக அரசு நமது அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல இளநிலைக் கல்லூரிகளை இங்கேயும் அறிமுகப்படுத்துவதோடு நமது மேனிலைக் கல்வியின் பாடத்திட்டத்தையும் சி.பி.எஸ்.ஈ முறைக்கு இணையாக மேம்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக