உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதியரசர் சதாசிவம் பொறுப்பேற்பு தொல்.திருமாவளவன் வாழ்த்து

இந்தியாவின் தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் பொறுப்பேற்றது தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை.  அவர் தனது பதவிக்காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி என்றென்றும் நிலைத்த புகழுடன் விளங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சுதந்திர இந்தியாவில் தமிழர் ஒருவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.  தனது நடுநிலைமையாலும் உழைப்பாலும் இத்தகு உயர்ந்த நிலைக்கு நீதியரசர் சதாசிவம் அவர்கள் உயர்ந்துள்ளார்.  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய நீதி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்தவர்கள் உரிய அளவில் பங்கேற்க வழிவகை செய்யப்பட வேண்டுமென நீதியரசர் சதாசிவம் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமின்றி, இந்திய சமூகத்தில் புரையோடியிருக்கும் சாதி எனும் கொடிய நோயின் அண்மைக்கால வெளிப்பாடாக உள்ள ‘கவுரவக் கொலைகள்’ என்னும் சமூகத் தீங்கை ஒழிப்பதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரது கருத்துக்கள் நீதியின்பாலும், சமூகநீதியின்பாலும் அவருக்குள்ள தெளிவான பார்வையை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.  இவ்வாறான உயர் பொறுப்புகளுக்கு வருகிறவர்கள் பேசத் தயங்கும் இத்தகைய சமூகப் பிரச்சனைகளை வெளிப்படையாகவும் பொறுப்புணர்வோடும் பேசியிருக்கிற நீதியரசர் சதாசிவம் அவர்கள் சில மாதங்கள் மட்டுமே இந்தப் பதவியை வகிக்க இருக்கிறார் என்ற போதிலும் அவர் தனது பதவிக் காலத்தில் மக்களுக்கு நலம்பயக்கும் மகத்தான தீர்ப்புகளை வழங்குவார் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.

தமிழகத்தில் பிறந்து இந்திய நாட்டின் தலைமை நீதிபதியாக உயர்ந்திருக்கும் நீதியரசர் சதாசிவம் அவர்கள் உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் தனது பணிகளைச் செய்து உலகமெங்கும் புகழ் சிறக்க வாழ்த்துகிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக