பா.ம.க.வினர் சுமத்தும் வீண்பழி - அரசு கவனித்துக்கொண்டிருக்கிறது; அமைதி காப்போம்!


பா.ம.க.வினர் சுமத்தும் வீண்பழி

அரசு கவனித்துக்கொண்டிருக்கிறது; அமைதி காப்போம்!

தொல்.திருமாவளவன் அறிக்கை

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கையும் பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் கடந்த ஒரு வார காலமாக திட்டமிட்ட வன்முறையில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.  இதுவரையில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்துள்ளதாகவும், 125க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வண்டிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருப்ப தாகவும், ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது.  அத்துடன், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரின் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திண்டிவனம் - மரக்காணம் சாலையில் முறுக்கேறி என்னுமிடத்தில் பா.ம.க. வன்முறைக் கும்பல் கல்வீசித் தாக்கியதில் தனியார் வண்டியின் ஓட்டுநர் ஒருவர் பலியாகியிருக்கிறார்.  திண்டிவனம் அருகே தரைப்பாலம் ஒன்றை வெடிகுண்டு களை வைத்துத் தகர்த்துள்ளனர்.  
இவ்வாறு, பா.ம.க.வினர் நடத்தும் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அளவில் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.  மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, அரசு, இரவு வேளைகளில் வடமாவட்டங்களெங்கும் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதால், அப்பாவிப் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் என்பதுடன், அரசுக்கு இதனால் பெருமளவில் வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.  இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து கூலிப் படையினரை இறக்கியுள்ளனர் என்றும் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, அப்பாவி தலித் மக்கள் மீதும், விடுதலைச் சிறுத்தைகள் மீதும் வீண்பழி சுமத்தும் முயற்சியில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருவது வேடிக்கையாக உள்ளது.  விழுப்புரம் நகரத்தில் தனியார் பேருந்து ஒன்றின் மீது கல்வீசிய தேசிங்கு என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் குடிபோதையில் இருந்ததாகவும், அரசு ஓட்டுநராகப் பணியாற்றக் கூடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது.  அவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  இதனை நடுநிலையாளர்கள் விசாரித்தால் உண்மையை அறிந்துகொள்ள முடியும்.  வேண்டுமென்றே விடுதலைச் சிறுத்தைகளின் மீது வீண்பழி சுமத்தி, தங்களை அகிம்சாவாதிகளாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி என்னுமிடத்தில் நடந்த கல்வீச்சு தொடர்பாக காவல்துறையினர் இரு சக்கர வண்டியில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.  பின்னர் அவர்களுக்கும் கல்வீச்சு சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பதை அறிந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.  அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினருக்கும் தெரியாது என்பதுதான் விசாரணையில் தெரிய வருகிறது.  ஆனால், அவர்கள் இருவரும் விடுதலைச் சிறுத்தைகள் என்றும் காவல்துறையினர் வேண்டுமென்றே அவர்களை விடுவித்துவிட்டார்கள் என்றும் அப்பட்டமான பொய்யைப் பரப்புகின்றனர்.

பா.ம.க.வினர் செய்யும் வன்முறைகளுக்கும் அவர்கள் பரப்பும் பொய்யுரைகளுக்கும் எல்லையே இல்லை என்கிற அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் தங்களைத் தவிர மற்றவர்கள் அனைவருமே விவரமில்லாத மூடர்கள் என்று நினைத்து பா.ம.க.வினர் செயல்படுவதாகத் தெரிகிறது. முழுப் பூசணிக்காயை பிடி சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள்.

வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய பாதுகாப்புடன் போக்குவரத்தை இயக்குவதற்கு அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தலித் மக்களின் மீது அவதூறுகளைப் பரப்பி வீண்பழி சுமத்தும் பா.ம.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை மற்றும் நீதித் துறையினை அணுகுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நல்லோர், சனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளோர், நடுநிலையோடு அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் பெரியோர் மற்றும் நாடாளுவோர் யாவரும் நாட்டின் நடப்புகளை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.  இத்தகைய சூழலில், விடுதலைச் சிறுத்தைகளும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அமைதி காப்பதுடன் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்

மேற்கண்ட அறிக்கையை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

0 comments:

கருத்துரையிடுக