டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்!


காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர்னாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ” கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்னாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம் கியூசெக்ஸ் தண்ணீர் திறந்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில்  ஒப்புக்கொண்டது தவறு. அது காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்புக்குக் காரணமாகிவிட்டது” என குற்றம் சாட்டியிருக்கும் கர்னாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ‘ தமிழ்நாட்டுக்குக் கொடுப்பதற்குக் காவிரியில் தண்ணீர் இல்லை’ எனவும் தெரிவித்திருக்கிறார். 

உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும் தமிழகத்துக்கு உரிய நீரைத் தரமாட்டோம் என கர்னாடக காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே கர்னாடக காங்கிரஸ் தலைவர் இப்படிப் பேசியுள்ளார். மத்தியில்  இருக்கும் காங்கிரஸ் அரசும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுக்கும். கடந்தகால நடைமுறைகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட காவிரி மேலாண்மை வாரியத்தையோ, காவிரி கண்காணிப்புக் குழுவையோ இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை. தேர்தல் லாபத்துக்காக மத்திய காங்கிரஸ் அரசு இப்படித் தமிழக மக்களின் உரிமையைப் பலிகொடுப்பது சரிதானா? என்பதைத் தமிழ்நாட்டிலிருக்கும் காங்கிரஸ்காரர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். கர்னாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவின் பேச்சை அவர்கள் கண்டிப்பதோடு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடும்படி மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.மத்திய அரசு இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு மதிப்பளித்துத் தமிழகத்துக்கு உரிமையான தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்னாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்துகிறோம். 

காவிரி ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது பாராட்டத்தக்கதுதான் என்றாலும் காவிரியில் தண்ணீர் வருவதற்கு அதுமட்டுமே போதுமானதல்ல. உச்ச்நீதிமன்றத்தின்மூலம்  மட்டும் இதைத் தீர்த்துவிட முடியாது என்பதைத் தமிழக அரசு புரிந்துகொண்டு தமிழக மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சனையில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கும் , கர்னாடக அரசுக்கும் காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

0 comments:

கருத்துரையிடுக