மக்கள் ஒற்றுமைப் பேரணி - பொதுக்கூட்டம் நடத்த விடுதலைச்சிறுத்தைகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி


புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மக்கள் ஒற்றுமைப் பேரணி மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கும்படி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடந்த 26-3-2013 அன்று சென்னை நகரக் காவல் துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது.  இரு வாரங்கள் கழித்து, நிகழ்ச்சிக்கு இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், உங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கக் கூடாது? என்று விளக்கம் கேட்டு காவல்துறை விடுதலைச் சிறுத்தைகளுக்கு அறிக்கை அனுப்பியது.  விளக்கம் கேட்கிறோம் என்கிற பெயரால் மேலும் காலத் தாழ்வை ஏற்படுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்படுவதாக உணர்ந்த நிலையில், 11-4-2013 அன்று உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசர் திரு. அகர்வால் அவர்களை அணுகி, எமது நீதிப் பேராணை (ரிட்) மனுவை ஏற்கும்படி கேட்டுக்கொண்டோம்.  அன்று தெலுங்கு வருடப் பிறப்பு விடுமுறை நாள் என்பதால் தலைமை நீதிபதி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து விடுக்கப்பட்ட எமது வேண்டுகோளை ஏற்று அன்றே சிறப்பு அமர்வுக்கு ஆணையிட்டார்.  அதன்படி, நீதியரசர் திரு. ராஜேஸ்வரன் அவர்கள் எமது நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.  விடுதலைச் சிறுத்தைகளின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் அவர்கள், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று வாதாடினார்.  அரசுத் தரப்பில், மாநகரக் காவல் ஆணையரின் பதிலை உடனடியாகப் பெற இயலாது என்றும், ஆகவே அடுத்த நாளைக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் மூர்த்தி கேட்டுக்கொண்டார்.   

அதன்படி 12-4-2013 பகல் 12 மணிக்கு நீதியரசர் ராஜேஸ்வரன் அவர்கள் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இவ்வழக்கில் அரசுத் தலைமை வழக்கறிஞர் திரு. யோமயாஜுலு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்று வாதாடினார்.  

வழக்கமாக அனைத்துக் கட்சியினருக்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் பேரணி நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுவரும் இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க காவல்துறை மறுப்பது ஏன் என்றும் இது சனநாயகத்திற்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் பிரபாகரன் வாதாடினார்.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதுதான் ஞாயமானது என்று நீதியரசர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர், “பொதுக்கூட்டத்தை நடத்துவோரும் அதில் பங்கேற்போரும் யார் என்பதை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்று கூறிய கருத்து அதிர்ச்சியளித்தது.  இதனை மறுத்து, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா என்பதால், அவ்விழாவை நடத்துவோரும் பங்கேற்போரும் பெரும்பாலும் தலித்துகள் என்பதை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டுகிறார் என்றும், இது தலித்துகள் என்பதனால் இழைக்கப்படும் ஓரவஞ்சனை என்றும் வழக்கறிஞர் பிரபாகரன் வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து, நீதியரசர் ராஜேஸ்வரன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கோரியபடி எழும்பூர் இராசரத்தினம் திடலிலிருந்து லாங்ஸ் தோட்ட சாலை - பாந்தியன் சாலை சந்திப்பு வரை பேரணி நடத்தவும், மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  அத்துடன், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் அத்தீர்ப்பில் கூறியிருக்கிறார். 

ஆகவே, திட்டமிட்டவாறு ஏப்ரல் 14 அன்று பிற்பகல் 3 மணியளவில் இராசரத்தினம் திடலிலிருந்து மக்கள் ஒற்றுமைப் பேரணியும், மாலை 6 மணியளவில் மயிலை மாங்கொல்லையில் விருதுகள் வழங்கும் விழா பொதுக்கூட்டமும் நடைபெறும். 

இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், மாற்றுக் கருத்துள்ளவர்களின் மனம் புண்படாத வகையிலும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையிலும் கட்டுப்பாடு காத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதும் அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெறுவதும் மட்டுமே நமது நோக்கம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் ஒற்றுமைப் பேரணியும், விருதுகள் வழங்கும் விழா பொதுக்கூட்டமும் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக