மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி
தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
முதல்வருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
பஞ்சாபைச் சேர்ந்த தேவீந்தர்சிங்பால் புல்லரின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காலதாமதத்தை ஒரு காரணமாகக் கருத முடியாது என நிலுவையில் உள்ள மரண தண்டனை வழக்குகளிலும் நீதிமன்றம் செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் வீரப்பன் கூட்டாளிகள் வழக்கிலும் ராஜீவ் கொலை வழக்கிலும் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கிலும் மரண தண்டனை பெற்று சிறையிலுள்ள தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.
புல்லர் வழக்கில் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்க 8 ஆண்டுகள் தாமதம் செய்வதால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது. அதை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தோடு தொடர்புடைய இந்தத் தீர்ப்பை அரசியலமைப்புச் சட்ட முழு அமர்வு ஒன்று ஆராய்ந்து தீர்ப்பளிப்பதே சரியானதாக இருக்கும். எனவே, கருணை மனு தொடர்பான நிலைப்பாட்டை இறுதிசெய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட முழு அமர்வு ஒன்றை அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
மரண தண்டனையை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் மாநில ஆளுநருக்கும் இருக்கிறது. ஒரு மாநிலத்தின் அமைச்சரவைக் குழுவில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டு ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டால் அவர் மரண தண்டனையை ரத்து செய்ய முடியும். இந்த அதிகாரத்தில் எந்தச் சட்டமும் குறுக்கிட முடியாது என அரசியலமைப்புச் சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, ராஜீவ் கொலை வழக்கு, தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு உள்ளிட்டவற்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணமாக அவர் திகழ வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டிக்கொள்கிறது.
தமிழ்நாட்டிலிருக்கும் அரசியல் கட்சிகள் தமக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து இந்தப் பிரச்சனையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப முன்வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக