தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்! - தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்!
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
நாளை மாலை மாமல்லபுரத்தில் சாதி அமைப்பு ஒன்று பவுர்ணமி விழா என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த விழா நடைபெற்றால் வன்முறை நேரலாம் என கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி நீதிமன்றம் அனுமதியளித்த காரணத்தால் அந்த விழா நடைபெறவுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவின்போது விழாவுக்கு வருகிறவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள தலித் கிராமங்களைத் தாக்குவதும், அதனால் பலருக்கு காயம் ஏற்படுவதும், தலித் மக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன. 2002ஆம் ஆண்டு மரக்காணம் தலித் காலனியில் நுழைந்து குடிசைகளைக் கொளுத்தியதுடன் தலித்துகள் பலரை கண்மூடித்தனமாக வெட்டிக் காயப்படுத்தினார்கள்.
வெண்ணாங்கப்பட்டு, எல்லையம்மன் கோவில், சீக்கனாங்குப்பம், கூவத்தூர், வயலூர் முதலான தலித் கிராமங்களும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
கடந்த ஆண்டு இந்த விழாவில் பேசியவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்பதால் காவல்துறை அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னால் தருமபுரியில் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்துக்கு மாமல்லபுரம் விழாவில் பேசப்பட்ட சாதிவெறிப் பேச்சுகளே காரணம் என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டும் மாமல்லபுரம் விழாவுக்கு வருவோர் தலித் கிராமங்களைத் தாக்கக்கூடும் என்கிற அச்சம் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள தலித் மக்கள் மட்டுமின்றி சிறுபான்மையினர், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் நிலவுகிறது.
விழாவுக்கு வருகிறவர்களால் எமது கட்சிக் கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதும், டிஜிட்டல் பேனர்கள் சேதப்படுத்தப்படுவதும் ஒவ்வோர் ஆண்டும் நடந்துவருகின்றன. எனவே, அத்தகைய சம்பவங்கள் நிகழாவண்ணம் காவல்துறை தடுத்திட வேண்டுமெனவும், கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள தலித் கிராமங்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பை வழங்குமாறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக