மாமல்லபுரம் சாதிவெறிப் பேச்சு - மரக்காணம் தீ வைப்பு சாதிவெறிக் கும்பலைக் கைது செய்ய வலியுறுத்தி மே 2ஆம் நாள் ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு


தமிழகத்தில் அண்மைக் காலமாக பா.ம.க.வினர், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். தமிழகமே தலைகுனியும் வகையில் தருமபுரியில் மூன்று கிராமங்களைத் தீ வைத்துக் கொளுத்தி வெறியாட்டம் போட்டதோடு அதை ஞாயப்படுத்தும் வகையில் கடந்த ஆறு மாத காலமாக திட்டமிட்ட அவதூறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் வட மாவட்டங்களில் தலித் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதும் சேரிகள் கொளுத்தப்படுவதும் அதிகரித்து வருகின்றன.  வட மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சாதிவெறி சக்திகளை ஒருங்கிணைத்து ஏழை எளிய தலித் மக்களுக்கெதிராகத் தூண்டிவிடும் ஆபத்தான போக்குகளையும் கடைப்பிடித்து வருகின்றனர்.  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மூலம் ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைத்து வருகின்றனர்.  தலித்துகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி முற்போக்குச் சக்திகளையும், பிற சனநாயக சக்திகளையும் துளியளவும் கூச்சமும் தயக்கமுமின்றி இழிவாகப் பேசியும் வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 25ஆம் நாள் மாமல்லபுரத்தில் நடத்திய சாதிச் சங்க விழாவில் தலித் மக்களையும் முற்போக்கான அரசியல் கட்சித் தலைவர்களையும் மிகக் கேவலமான முறையில் பேசியதுடன் அப்பாவி வன்னிய இளைஞர்களுக்கு சாதிவெறியை ஊட்டியுள்ளனர்.  கடந்த ஆறு மாத காலமாக அவர்கள் செய்த சாதிவெறிப் பிரச்சாரத்தால் மாமல்லபுரம் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கட்டுப்பாடற்ற முறையில் வன்முறையில் இறங்கினர்.  இதனால் தலித்துகளும் இசுலாமியர்களும் இன்னும் பிற பொதுமக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால், முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல விடுதலைச்சிறுத்தைகள் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள்.  மரக்காணம், கழிக்குப்பம் கிராமங்களில் தலித் மக்களின் 15 வீடுகள்  கொளுத்தப்பட்டுள்ளன.  தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் சேட்டு என்பவர் பலியாகியுள்ளார்.  ஏகாம்பரம் என்பவர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  மேலும் பல இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர்.  கூனிமேடு என்னுமிடத்தில் இசுலாமியர்களும் பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளனர்.   அரசுப் பேருந்துகளும் பொதுமக்களும் வண்டிகளும் கொளுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் ஒருவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.  

மாமல்லபுரத்தில் அவர்கள் பேசியதைத் தொடர்ந்து வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். நேற்று (27-4-2013) திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர்கள் இருவர் ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

சாதிவெறியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. அரசின் இந்த மெத்தனப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.  வெளிப்படையாக சாதிவெறியைத் தூண்டிவரும் பா.ம.க. நிறுவனர் இராமதாசு உள்ளிட்ட சாதிவெறிக் கும்பல் அனைவரையும் கைதுசெய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 2-5-2013 அன்று விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  முற்போக்கு சக்திகள், சனநாயக சக்திகள் யாவரையும் ஒருங்கிணைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்ணில் அமைதியை நிலைநாட்ட, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க சனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விடுதலைச்சிறுத்தைகளின் இந்த அறப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கிட வேண்டுகிறோம்.


இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக