பூந்தமல்லி-செங்கல்பட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்!


சட்டத்திற்குப் புறம்பான பூந்தமல்லி-செங்கல்பட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகைப் போராட்டம்!

பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி இன்று (26-3-2013) காலை 11 மணியளவில் பூந்தமல்லி சிறப்பு முகாம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.  

பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சந்திரகுமார், பகீதரன், ஜெயமோகன், கங்காதரன் ஆகியோரைச் சந்திப்பதற்காக கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சென்றனர்.  காவல்துறையும், வருவாய்த் துறை அதிகாரிகளும் தடுத்து நிறுத்தியதால், அங்கேயே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  "விடுதலை செய் விடுதலை செய் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்துச் சொந்தங்களை விடுதலை செய்! இழுத்து மூடு இழுத்து மூடு சட்டவிரோதமான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு!, தமிழக அரசே சிறப்பு முகாம்களை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவா!' ஆகிய முழக்கங்களை முன்வைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  





துணை வட்டாட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இதுவரை உணவுப் படியாக ரூபாய் 70 அரசால் கொடுக்கப்பட்டிருந்தது.  அதனை ரூ. 150ஆக உயர்த்திக் கேட்டு 6 மாதம் ஆகியும் இன்னும் தரவில்லை.  உறவினர்கள் சந்திக்க அனுமதியில்லை. அயல்நாட்டவர் சட்டத்தில் சொல்லப்படாதவாறு, குடும்பத்திலிருந்து பிரித்து சிறப்பு முகாமில் அடைப்பது சட்டவிரோதம் என்று விடுதலைச் சிறுத்தைகள் வாதிட்டனர். உங்கள் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் சொல்கிறேன் என்று அவர் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஏப்ரல் 3ஆம் நாள் மிகப் பெரிய அளவில் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இப்போராட்டத்தில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி விடுதலையான ஈழத்தமிழர் செந்தூரன் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளர் பூவை வல்லரசு, மாவட்டச் செயலாளர் கதிர்நிலவன், தேவமுதல்வன், பூவை ஒன்றியச் செயலாளர் முகிலன், பத்ரி கென்னடி, எழிலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டனர்.

0 comments:

கருத்துரையிடுக