விடுதலைச் சிறுத்தைகளின் வழக்கறிஞர் அணி தீர்மானமங்கள்



தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்களை நடைமுறைப் படுத்தவேண்டிய தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் சாதிவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து தலித் மக்களுக்கு எதிராகவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் வெளிப்படையாகச் செயல்பட்டுவருகின்றனர்.  இத்தகைய நிலைமைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டிய தேவையின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகளின் வழக்கறிஞர் அணி 6-1-2013 அன்று சென்னையில் கூடியது.

வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் திருமதி எழில்கரோலின் தலைமையிலும், வழக்கறிஞர் இளமாறன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1.  தருமபுரி அருகேயுள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் 7-11-2012 அன்று நடந்த சாதிவெறியாட்டம் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறையாகும்.  ஆதிக்கச் சாதி வெறியர்கள் அப்பாவி தலித் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதலில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.  காவல்துறையினர் சாதிவெறியர்களுக்கு உடந்தையாக வெளிப்படையாகச் செயல்படும் நிலை அங்குள்ளது.  முதல் தகவலறிக்கையிலும்கூட பொருத்தமான சட்டம் மற்றும் பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவுசெய்யவில்லை.  எனவே, இவ்வழக்கை மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு (சி.பி.ஐ.) மாற்றம் செய்திட வேண்டும் என்று தமிழக, இந்திய அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

2. தருமபுரி வெறியாட்டத்தைத் தொடர்ந்து பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பிற சாதிவெறி அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழகமெங்கும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இக்கூட்டங்களில் தலித் மக்களை ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று இழிவுபடுத்தியும் சாதிப் பெயர்களைச் சொல்லி வெளிப்படையாகக் கேவலப்படுத்தியும் பேசி வருகின்றனர்.  குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது ஆதாரமில்லாத அவதூறுகளை அநாகரிகமான முறையில் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.  அவர்களின் பேச்சும் செயலும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்ற நடவடிக்கைகளாகும். எனவே, சமூக அமைதிக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டும்படியும் நலிந்த பிரிவினராய் உள்ள தலித் மக்களை இழிவுபடுத்தியும் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவரும் அவர்கள் மீது பிசிஆர் மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகளின் வழக்கறிஞர் அணி வலியுறுத்துகிறது.

3. விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மீதும், திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து பேசியும் ஊடகங்களில் பேட்டியளித்தும் வருபவர்கள் மீதும் ஆதாரமில்லாத அத்தகைய அவதூறுகளை உள்நோக்கத்துடன் பரப்பிவரும் ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடுப்பது என்று விடுதலைச் சிறுத்தைகளின் வழக்கறிஞர் அணி தீர்மானிக்கிறது.

4. தலித் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் வகையில் செயல்பட்டுவரும் சாதிவெறி அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் கருத்தில்கொண்டு தடை விதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

5. புதுதில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயமற்ற கொடுஞ்செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.  அதேபோல, அண்மையில் தமிழகத்தில் காந்தலவாடி கல்லூரி மாணவி, தூத்துக்குடி பள்ளி மாணவி ஆகியோர் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  தற்போது வானூர் பள்ளி மாணவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  மேலும், தலைஞாயிறு பள்ளிச் சிறுமி, புதுச்சேரி பள்ளி மாணவி ஆகியோர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.  பெண்களுக்கு எதிரான இத்தகைய ஆணாதிக்க வன்கொடுமைகளை விடுதலைச் சிறுத்தைகளின் வழக்கறிஞர் அணி வன்மையாகக் கண்டிக்கிறது.  இவற்றில் காந்தலவாடி கல்லூரி மாணவி படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் கைது செய்யாத காவல்துறையின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு மேற்சொன்ன வழக்குகளில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

6 தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் பாதுகாப்புச் சட்டங்களையும் மகளிர் பாதுகாப்புச் சட்டங்களையும் இன்னும் பிற சமூகப் பாதுகாப்புச் சிறப்புச் சட்டங்களையும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு காவல் மற்றும் நீதித் துறையினருக்கு உரிய அழுத்தங்களை அளித்திட வேண்டிய கடமை வழக்கறிஞர் சமூகத்திற்கு உள்ளது.  ஆகவே, சாதி, மதம் கடந்த நிலையில் அனைத்துத் தரப்பு வழக்கறிஞர் சமூகமும் நலிந்த பிரிவினருக்காக, மனித உரிமைகளுக்காக வாதாடவும் போராடவும் முன்வரவேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

7. தலித்துகள், பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கான சிறப்புச் சட்டங்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியினருக்கு மண்டலவாரியான சிறப்புப் பயிற்சி முகாம்கள் மதுரை, திருச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய மையங்களில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக