விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 15-12-2012 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னை, கோயம்பேடு, விஜய் பார்க் விடுதியில் நடைபெற்றது.  கட்சியின் பொதுச் செயலாளர்கள் ம.செ.சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார் மற்றும் பொருளாளர் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் யாவரும் கலந்துகொண்டனர்.  இக்கூட்டத்தில் தருமபுரி மற்றும் பாச்சாரப்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற சாதிவெறியாட்டம், கட்சியின் நிர்வாகம் உள்ளிட்ட செயல் திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் நடப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன.  நிறைவாக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. வீரவணக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் திரு. நாராயணன் (எ) அம்பேத்கர் வளவன் 9-12-2012 அன்று சாதிவெறியர்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் இதர பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும் சிறுபான்மையினருக்காகவும் தொடர்ந்து போராடி அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு போராளியாக அவர் விளங்கினார்.  அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.  அத்துடன், அண்மையில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாகூர் சத்தியமூர்த்தி அவர்களுக்கும், சாதிவெறியர்களால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கடலூர் மாவட்டம் காந்தலவாடி கல்லூரி மாணவி பிரியா அவர்களுக்கும், சாதிவெறியர்களின் ஒடுக்குமுறைகளாலும் அவமதிப்புகளாலும் தற்கொலை செய்துகொண்ட தேனி மாவட்டம் கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்து அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இச்செயற்குழு தமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

2. கொலையாளிகளைக் கைது செய்

காஞ்சி அம்பேத்கர்வளவன், நாகூர் சத்தியமூர்த்தி, காந்தலவாடி பிரியா ஆகியோரை காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்த சாதி ஆதிக்க, ஆணாதிக்க வெறியர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.  இவ்வழக்குகளில் தொடர்புடைய உண்மையான மற்றும் முதன்மையான குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.  காவல்துறையின் இத்தகு மெத்தனப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிப்பதோடு கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யவும், படுகொலையானோரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்கவும், அவர்தம் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசை வற்புறுத்துகிறது.

அத்துடன், கல்லுப்பட்டி நாகமுத்து தற்கொலைக்குக் காரணமான சாதிவெறியர்களைக் கைது செய்யவும், நாகமுத்துவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்கவும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு இம்மாநிலச் செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

3. தருமபுரி சாதிவெறியாட்டம் - சி.பி.ஐ. விசாரணை தேவை

தருமபுரி அருகே நத்தம், அண்ணா நகர் மற்றும் கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் தலித் மக்களுக்கு எதிராக கடந்த 7-11-2012 அன்று சாதிவெறியர்கள் திட்டமிட்ட கொடூரமான தாக்குதலை நடத்தினர்.  திருட்டு, கொள்ளை, தீ வைப்பு போன்ற சாதி வெறியாட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.  இவ்வழக்கை தற்போது தமிழக அரசு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றியுள்ளது.  பட்டப் பகலில் 6 மணி நேரம் நடைபெற்ற மனிதநேயமற்ற இச்சாதிவெறியாட்டத்தை வேடிக்கை பார்த்த தமிழக அரசு மற்றும் அதன் காவல்துறை பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் விசாரணை நடத்தும் என நம்புவதற்கு வாய்ப்பில்லாத நிலை உள்ளது.  எனவே தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் தலையீடு இல்லாத வகையில் இவ்வழக்கை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகளின் இச்செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.  அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் உரிய இழப்பீடு வழங்கவும், வீடுகள் கட்டித் தரவும், இதர மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டுமென இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

4. சனநாயக சக்திகளுக்கு நன்றி

தருமபுரி அருகே நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி மற்றும் கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாளையம் ஆகிய கிராமங்களில் நடந்த சாதிவெறியாட்டத்தை திட்டமிட்டு நடத்திய சாதிவெறியர்களின் பிற்போக்குத்தனத்தை மனிதநேயத்தோடு வெளிப்படையாகக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ள இடதுசாரி அமைப்புகள், திராவிட இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அமைப்புகள் மற்றும் இதர சனநாயக சக்திகள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்து சாதி ஆதிக்க, ஆணாதிக்க பிற்போக்குச் சக்திகளின் சதி முயற்சிகளை முறியடிப்பதற்கும் தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

5. பதவி உயர்வில் இடஒதுக்கீடு - அனைத்துக் கட்சியினருக்கும் நன்றி

தாழ்த்தப்பட்ட-பழங்குடியினருக்கு அரசுப் பணி பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசியலமைப்புச் சட்டம் 117வது திருத்த மசோதாவை வரவேற்று ஆதரித்துள்ள அனைத்துக் கட்சியினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.  அத்துடன், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

6. மின்வெட்டுச் சிக்கல் - மைய அரசுக்குக் கண்டனம்

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மின்வெட்டுச் சிக்கல் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதனால் தமிழக மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 1000 மெகா வாட் மின்சாரம் வழங்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற நிலையிலும் இந்திய அரசு பாராமுகமாய் அமைதி காப்பது வேதனைக்குரியதாகும்.  இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய தொகுப்பிலிருந்து உடனடியாக 1000 மெகா வாட் மின்சாரத்தை வழங்க வேண்டுமென இச்செயற்குழு வற்புறுத்துகிறது.  மேலும், தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதை இடைக்காலமாக நிறுத்திவைத்து மின்வெட்டுச் சிக்கல் தீரும் வரையில் அவற்றை முழுமையாகத் தமிழகமே பயன்படுத்திக்கொள்ள இந்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

7. கூடங்குளம் - அரசு ஒடுக்குமுறைக்குக் கண்டனம்

கூடங்குளம் அணுமின் உலையை திறக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து சனநாயக முறையில் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவி ஒடுக்குமுறைகளைத் திணித்துவரும் தமிழக மற்றும் இந்திய அரசுகளின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  அவர்கள் மீது புனையப்பட்டுள்ள அனைத்துப் பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமெனவும் அணுமின் உலையை இந்திய அரசு திறக்கக் கூடாது எனவும் இச்செயற்குழு இந்திய, தமிழக அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.

8. ஈழ மாணவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை - சிங்கள அரசுக்குக் கண்டனம்

தமிழீழத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நடந்த நவம்பர் 26இல் மாவீரர் நாள் கொண்டாடியதால் சிங்கள இனவெறிப் படையினர் அம்மாணவர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தியதுடன் அவர்களை கொடூரமான வதைகளுக்குட்படுத்தியும் வருகிறது.  இந்நிலையில், இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தமிழீழ மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம்களை அப்பகுதிகளிலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.  

9. நேரடி அந்நிய முதலீடு - அரசு கைவிட வேண்டும்

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டினை அனுமதிப்பதை விடுதலைச் சிறுத்தைகள் மிகக் கடுமையாக எதிர்க்கிறது.  சில்லறை வணிகத்தில் மட்டுமின்றி பொதுக்காப்பீட்டுக் கழகம் மற்றும் ஓய்வூதியத் துறைகளிலும் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது.  இந்திய அரசின் இத்தகைய போக்குகளால் இந்தியாவின் இறையாண்மையே கேள்விக்குறிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  அதாவது, இந்தியாவை மறு காலனியாதிக்க நாடாக மாற்றும் நிலையை இது உருவாக்கும்.  சில்லறை வணிகர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதோடு இந்தியாவின் இறையாண்மையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்திய அரசு தமது முயற்சியைக் கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை தற்போதைய சூழலில் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒற்றைக் கருத்தின் அடிப்படையில் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.  எனினும் நேரடி அந்நிய முதலீட்டை முழுமையாக எதிர்க்கிறது என்பதை இச்செயற்குழு உறுதிப்படுத்துகிறது.

10. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படாத நிலை உள்ளது.  பாதிக்கப்படும் தலித்துகள் கொடுக்கும் புகார்களை காவல்துறையினர் பெரும்பாலும் வழக்குகளில் பதிவு செய்யாமல் புறந்தள்ளும் நிலையே உள்ளது.  கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அவற்றை தவறான தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாக ஓரிரு வாரங்களில் பெரும்பாலும் தள்ளுபடி செய்யும் நிலையே உள்ளது.  ஒட்டுமொத்தத்தில் 1 விழுக்காடு அளவில் கூட தமிழகத்தில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இல்லை என்பதே உண்மை நிலையாகும்.  இந்நிலையில் இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சாதி ஆதிக்க - சனநாயக விரோத சக்திகள் எதிர்ப்புத் தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது.  தலித் மக்களுக்கும் தலித் இயக்கங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலையே தமிழகத்தில் நிலவுகிறது.  தமது அரசியல் ஆதாயத்திற்காக சாதியவாத சக்திகள் வெளிப்படையாக சாதிவெறியைத் தூண்டும் நிலை அதிகரித்துள்ளது.  தமிழக அரசு இப்போக்குகளை அமைதியாக வேடிக்கை பார்ப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதியைக் கருத்தில்கொண்டு சாதிவெறியைத் தூண்டுவோரின் நடவடிக்கைகளைகக் கட்டுப்படுத்தும் வகையில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. மேலும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு மாதந்தோறும் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் கூட்டங்களை மாவட்டந்தோறும் தவறாமல் நடத்த வேண்டுமெனவும் சமூக நல்லிணக்கச் சூழல்களைப் பெருக்கும் வகையில் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சமூக சீர்திருத்தத் துறை தமது சட்டப்பூர்வமான கடமைகளை ஆற்ற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

11. காவிரி நீர்ச் சிக்கல் - கர்நாடக அரசை முடக்க வேண்டும்

தமிழகத்திற்கு சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் பிடிவாதமாக மறுதலித்துவரும் கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.  தமிழகத்தில் குறுவை சாகுபடி வெகுவாகப் பாதிக்கப்பட்டதோடு தற்போது சம்பா சாகுபடியும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் பட்டினிச் சாவுகள் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.  இத்தகைய சூழலிலும் இந்திய அரசு, கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது அதிர்ச்சியளிக்கிறது.  உச்ச நீதிமன்றம், காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு ஆகிய சட்டப்பூர்வமான அமைப்புகளின் தீர்ப்புகள் மற்றும் ஆணைகளை மதிக்காமல் இந்திய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவரும் கர்நாடக மாநில அரசை எச்சரிக்க வேண்டிய இந்திய அரசு, மாறாக இத்தீர்ப்புகளை அரசிதழில் வெளியிடுவோம் என்று கூறியிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.  இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அரசியலமைப்புச் சட்டத்திற்கும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகின்ற கர்நாடக மாநில அரசை அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் 365ன்படி உடனடியாக இடைநீக்கம் செய்து முடக்கி வைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

12. 2013 மார்ச் திங்களில் பொன்விழா மாநாடு

கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 50வது பொன் விழா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப் பெற்று கட்சி வளர்ச்சிக்கென பொற்காசுகள் திரட்டும் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய நிலையில், பொன்விழா நிறைவு மாநாட்டினை 23-12-2012 அன்று நடத்துவதென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், இன்னும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டியிருப்பதனாலும், பொன்விழா மாநாடு தொடர்பான வெளியீட்டுப் பணிகளை முழுமை செய்ய வேண்டியிருப்பதனாலும் பொன்விழா நிறைவு மாநாட்டினை வரும் 2013 மார்ச் திங்களில் நடத்துவது என்றும் அம்மாநாட்டினை 'நீர் உரிமை மாநாடாக' நடத்துவது எனவும் மாநிலச் செயற்குழு தீர்மானிக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக