தாழ்த்தப்பட்ட-பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை ஆதரித்த கட்சிகளுக்கு நன்றி! தொல்.திருமாவளவன் அறிக்கை

எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தடைகளைத் தாண்டி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் மத்திய அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

சமாஜ்வாடி கட்சியின் எதிர்ப்பையும் தாண்டி மாநிலங்களவையில் அம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  அதன் மீது விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.  அதில் கலந்துகொண்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்துப் பேசியுள்ளனர். இடதுசாரிகள் மற்றும் பாரதிய சனதா ஆகிய தேசிய கட்சிகளும் இதனை வரவேற்றுள்ளன. தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களுக்கு சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் அவர்களுக்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்; அதற்கு வகை செய்யும் விதத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடாகும்.  தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட மசோதாவைப் போலவே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவர வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

சமூகநீதிக்கு எதிராகவும் சாதிய வன்முறைகளைத் தூண்டும் விதத்திலும் பிற்போக்குச் சக்திகள் சில அண்மைக் காலமாக செய்துவரும் வன்முறைப் பிரச்சாரத்தையும் தாண்டி, தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைக்காக ஆதரவுக் குரல் எழுப்பியுள்ள அனைவரும் இந்திய சனநாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.  இத்தகைய வரலாற்றுக் கடமையை ஆற்றியிருக்கும் அவர்கள் அனைவருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் விடுதலைச்சிறுத்தைகள் மீண்டும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக