முதல்வரின் அறிவிப்புகள் தலித் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது! தொல்.திருமாவளவன் அறிக்கை
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் இறுதியில் தமிழக முதல்வர் 343 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பெருகிவரும் சாதிய வன்கொடுமைகளைத் தடுப்பதற்கும், சாதிவெறியைத் தூண்டி தமிழகத்தின் அமைதியைக் கெடுப்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உறுதியான சில அறிவிப்புகளை இம்மாநாட்டில் வெளியிடுவார் என எதிர்பார்த்திருந்த தலித்துகளுக்கு முதல்வரின் அறிவிப்புகள் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளன.
தருமபுரியில் சாதி வெறியர்களால் 268 வீடுகள் சேதப்படுத்தப்பட்டதை அனைவருமே குறிப்பிட்டிருந்தனர். ஆனால் 99 வீடுகள் மட்டுமே கட்டித் தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வீடுகளும் வழக்கமான 'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின்கீழ் கட்டப்படுமா? அல்லது தமிழக அரசின் 'பசுமை வீடுகள்' திட்டத்தின்கீழ் கட்டித்தரப்படுமா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு முதல்வரின் அறிவிப்பு முழுமையான ஆறுதலைத் தருவதாக இல்லை. சாதியில்லாத சமுதாயத்தை அமைப்பது குறித்து பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் கல்வித் துறையும் காவல்துறையும் இணைந்து நாடகங்கள் மூலம் சாதிஒழிப்புப் பரப்புரையை மேற்கொள்வார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றாலும் சாதிய வன்முறையில் ஈடுபடுவோர் மீதும் தலித் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
முதல்வர் தலைமையில் அதிகாரிகள் மாநாடு நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே கடலூர் மாவட்டம் சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது. அரசாங்கத்தின் புள்ளி விவரத்தின்படி தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் விழுப்புரம் மாவட்டமும் கடலூர் மாவட்டமும் முன்னிலையில் உள்ளன. அண்மைக்காலமாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தமிழகத்தில் அமைதியைக் கெடுக்கும் வகையில் இருப்பதோடு இத்தகைய படுகொலைகளுக்கும் தூண்டுகோலாக இருக்கின்றது. இதை அரசு கண்டும் காணாமல் இருப்பது ஏன் எனப் புரியவில்லை.
குண்டர் தடுப்புச் சட்டத்தைக் கடுமையாக்குவோம் எனத் தெரிவித்துள்ள முதல்வர் சாதிய வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு தடுப்போம் என அறிவிக்காதது தலித் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான சட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் சாதிய வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து அனுமதித்தால் முதல்வர் விரும்புகிற முன்னேற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
முன்னுரிமை அடிப்படையில் சாதிய வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும் உடனடியாக தமிழக அரசு முன்வரவேண்டும். தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக