நாடார் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வரலாற்று உண்மைக்கு மாறான பகுதிகளை பாடப்புத்தகத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்! தொல். திருமாவளவன் கோரிக்கை



தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களும் மூத்த தமிழ்க்குடிமக்களுமான நாடார் சமூகத்தைச் சார்ந்த மக்களை இழிவுபடுத்துகிற வகையில் மைய இடைநிலை கல்விவாரியப் பாடத்திட்டத்தின் 9ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.  இதனை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அனைத்துத் தரப்பினரும் தமது கண்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.  திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இது தொடர்பாக தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாடப்புத்தகத்தில் வரலாற்றுக்குப் புறம்பான செய்திகள் இருப்பின் அதனை நீக்குவதாக தற்போது உறுதியளித்திருப்பதாகவும் தெரிகிறது.
எந்த அடைமொழி தங்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லி அதனை ஒழிப்பதற்காகக் கடந்த காலங்களில் நாடார் சமூக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினார்களோ அதே அடைமொழியை மீண்டும் பாடப் புத்தகங்களில் பதிவு செய்வதை, அச்சமூகத்தினரை வேண்டுமென்றே காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் வெளியிட்டிருப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது.  சாதி ஆதிக்க உணர்வுள்ளவர்கள் பாடத் திட்டங்களை வரைவு செய்யும் குழுவில் இடம்பெற்றிருப்பதனால் தங்கள் விருப்பு வெறுப்புகளை அதில் திணிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.  

இதேபோல புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய கார்ட்டூனை பொருத்தமில்லாத காலச் சூழலில் பாடப் புத்தகங்களில் பதிவுசெய்து தங்களின் சாதி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்தினர். தற்போதைய நிலையில் நாடார் சமூக மக்களின் உணர்வுகளைச் சீண்டும் வகையில் வரலாற்றைத் திரித்து இளம்பிஞ்சுகளின் உள்ளத்தில் நச்சுக் கருத்துக்களைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது ஏன்?  திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய கடுமையான சாதிவெறிப் போக்குகளை எதிர்த்து எத்தனையோ அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தாங்கிக்கொண்டு கடுமையாகப் போராடி ஆதிக்கச் சாதிவெறியர்களால் திணிக்கப்பட்ட இழிவுகளையெல்லாம் துடைத்தெறிந்து தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்ந்துவரும் நாடார் குலத்தின் இன்றைய வளர்ச்சி நிலையைச் சகித்துக்கொள்ள முடியாத நிலையில்தான் இத்தகைய அறுவறுப்பான முயற்சியில் சாதிவெறியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அய்யா வைகுந்த சுவாமிகள் காலத்திலிருந்து பெருந்தலைவர் காமராசர் காலம் வரையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகவே இன்று நாடார் சமூகத்தினர் வியக்கும் வகையிலான மேம்பாட்டை அடைந்துள்ளனர்.

உழைப்பாலும் போராட்டங்களாலும் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் வளர்ச்சியடைந்துள்ள நாடார் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள வரலாற்று உண்மைக்கு மாறான பகுதிகளை உடனடியாக அப்பாடப் புத்தகத்திலிருந்து இந்திய அரசு நீக்க ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.  இது குறித்து விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்களையும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களையும் நேரில் சந்தித்து முறையிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தொல். திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக