தொல்.திருமாவளவன் பக்ரீத் வாழ்த்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தி!
உலகம் தழுவிய அளவில் இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் பெருநாளான தியாகத் திருநாளாம் பக்ரீத் நாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
மானுடத்தை மேம்படுத்த அன்பையும், அமைதியையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும் உலகுக்குப் போதித்த பெருமானார் முகமது நபி அவர்களின் வருகைக்கு முன்பே போற்றப்பட்ட பெருநாள்தான் பக்ரீத் பெருநாளாகும்.
தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட இப்ராகிம் நபி அவர்கள், ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக தன் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தபோது, இறைவன் அதனைத் தடுத்து மகனுக்குப் பதிலாக ஆட்டை பலியிட ஆணையிட்டதை நினைவு கூரும் வகையில், இசுலாமியர்கள் இந்த பக்ரீத் பெருநாளை 'குர்பானி' கொடுத்து கொண்டாடுகின்றனர்.
இறைவனின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும், தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த தியாக உணர்வும் இப்ராகிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை முகமது நபி உட்பட இஸ்லாமிய பேரினம் நினைவு கூர்ந்து போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும். சோதனைகளைத் தாங்கும் மனவலிமையும், ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக எதையும் இழக்கத் துணியும் அர்ப்பணிப்பும் நமக்கும் வரவேண்டும் என்பதே இந்த பெருநாள் உணர்த்தும் பொருளாகும்.
அத்தகைய போற்றுதலுக்குரிய தியாகத் திருநாளில், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது தியாகத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
0 comments:
கருத்துரையிடுக