உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ்: குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தொல்.திருமாவளவன் கோரிக்கை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150ஆம் ஆண்டு விழா, 08-09-2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகைதர உள்ளார். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று [06-09-2012] நண்பகல் 1 மணியளவில் குடியரசுத் தலைவர் அவர்களை குடியரசு தலைவர் இல்லத்தில் சந்தித்தார்.
சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவரை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்பதாகக் கூறிய தொல்.திருமாவளவன், அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் 348[2]இன் படி, உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில அரசுகளின் அலுவல் மொழியை பயன்படுத்தலாம். அதன்படி மத்தியபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் இந்தி அல்லது அம்மாநிலங்களின் அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளன.
கடந்த 06-12-2006 அன்று தமிழை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகப் பயன்படுத்த தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே தீர்மானத்தை சென்னை உயர்நீதிமன்றமும் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்மானங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திற்கும் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் உச்ச நீதிமன்றம் தற்போதைய சூழலில் தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக பயன்படுத்துவது பொருத்தமாக அமையாது என இந்திய அரசுக்குக் குறிப்பு எழுதியுள்ளது.
இதனால் இந்திய அரசு இதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழை இந்திய அரசு செம்மொழியாக அறிவித்துள்ள நிலையிலும், அதனை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்காதது ஏன் என்று விளங்கவில்லை.
இந்தியாவிலுள்ள நான்கு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டு, தமிழ் மொழியை மட்டும் ஏற்க மறுப்பதை இந்திய அரசு தமிழுக்கு எதிராக ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாகக் கருத நேரிடுகிறது. ஆங்கிலமே வேண்டாம் என்று தமிழகத்தில் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. ஆங்கிலத்துடன் தமிழையும் கூடுதல் அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என்றுதான் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
ஆகவே, உயர் நீதிமன்றத்தின் 150ஆம் ஆண்டுவிழா நடைபெறும் இச்சூழலில் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக’ இந்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் இதனை இந்திய அரசின் சட்டத்துறை அமைச்சரின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.
0 comments:
கருத்துரையிடுக