தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு மசோதா பிற்படுத்தப்பட்டோருக்கான இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முறையல்ல!
தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு மசோதா
பிற்படுத்தப்பட்டோருக்கான இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முறையல்ல!
பிற்படுத்தப்பட்டோரின் சமூக நீதிக்காக தலித் இயக்கங்கள் போராடியது வரலாற்று உண்மை!
தொல்.திருமாவளவன் அறிக்கை
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு அரசுப் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்த (117வது திருத்தம்) மசோதா - 2012 இன்று (5-9-2012) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் இந்திய அரசு இம்மசோதாவை இன்று அறிமுகம் செய்யும் நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரு. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த நரேஷ் அகர்வால் அம்மசோதாவை அமைச்சரின் கையிலிருந்து தட்டிப் பறிக்க முயற்சித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் அவுதார் சிங் அவரைத் தடுப்பதற்கு முயன்றார். இருவரும் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக்கொள்ளும் நிலை மாநிலங்களவையில் ஏற்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற அவையின் நாகரிகத்தையும் சனநாயகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு அரசு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் எதிர்க்கவோ தடுக்கவோ முயற்சிக்காத நிலையில் சமாஜ்வாடி கட்சியினர் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகள் வன்முறைகளைத் தூண்டியபோது இதர பிற்படுத்தப்பட்டோரின் சமூக நீதிக்காக அகில இந்திய அளவில் தலித் இயக்கங்கள் போராடின என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும். இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கச் சட்டச் சிக்கல் ஏற்படாத வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை வரவேற்க வேண்டிய இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இயக்கங்கள், குறிப்பாக சமாஜ்வாதி கட்சி, எதிர்ப்புத் தெரிவிப்பதோடு அவையில் நாகரிக வரம்புகளை மீறிச் செயல்பட்டிருப்பது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழலை அம்பலப்படுத்தும் வேளையில் அதனைத் திசை திருப்புவதற்காக இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டுவது முற்றிலும் பொருத்தமில்லாததாக உள்ளது. இம்மசோதாவை கடந்த கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யும்படி வற்புறுத்தப்பட்ட நிலையிலும் காலந்தாழ்ந்து தாக்கல் செய்திருப்பதற்கு அரசின் மந்தமான நடவடிக்கைகளும் ஆதிக்கச் சக்தியினரின் சதிகளுமே காரணங்களாகும். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் குற்றச்சாட்டு திடீரென தற்போது வெடித்துள்ளது. இதற்கும் மசோதாவுக்கும் முடிச்சுப் போடுவதிலிருந்து இம்மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காகவே இந்த ஊழல் விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சியினர் கையிலெடுத்துள்ளனரோ என்கிற அய்யமும் எழுகிறது.
இவண்
தொல். திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக