கூடங்குளத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி - துப்பாக்கிச்சூடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் திடீர் சாலை மறியல் - சுமார் 300 பேர் கைது
கூடங்குளத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி - துப்பாக்கிச்சூடு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்
சென்னையில் திடீர் சாலை மறியல் - சுமார் 300 பேர் கைது
கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வலியுறுத்தியும் அணுஉலையை இழுத்து மூட வலியுறுத்தியும் போராடிய மக்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை கோயம்பேடு அருகே இன்று (11-9-2012) காலை 10 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொல்.திருமாவளவன் தலைமையில் அணிதிரண்ட விடுதலைச் சிறுத்தைகள் சாலையில் அமர்ந்து இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பினர். 'இந்திய அரசே! இந்திய அரசே! இழுத்து மூடு! இழுத்து மூடு! கூடங்குளம் அணுஉலையை உடனடியாக இழுத்து மூடு!, நிரப்பாதே! அணு உலையில் எரிபொருளை நிரப்பாதே! இழிச்சவாயர்களா இழிச்சவாயர்களா தமிழர்கள் மட்டும் இழிச்சவாயர்களா?, கேரளாவில் நிறுவ முடியாத அணுஉலையை தமிழ்நாட்டில் அமைப்பது ஏன்? அமைப்பது ஏன்?, ரத்து செய்! ரத்து செய்! ரஷ்யாவோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்! தமிழக அரசே! தமிழக அரசே! அறவழியில் போராடிய அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை ஏவாதே! கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்! அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்திய, துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழக அரசைக் கண்டிக்கின்றோம்.! வன்மையாகக் கண்டிக்கின்றோம்! பேச்சுவார்த்தை நடத்து! பேச்சுவார்த்தை நடத்து! போராட்டுக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்து! வீரவணக்கம்! வீரவணக்கம்! அணுஉலை எதிர்ப்புப் போரில் காவல்துறையின் அடக்குமுறையில் களப்பலியான அந்தோணிக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!' போன்ற முழக்கங்களை சுமார் அரைமணி நேரம் விடுதலைச் சிறுத்தைகள் உரத்து முழங்கினர். கட்சிக் கொடிகளை ஏந்தியும் முழக்க அட்டைகளை ஏந்தியும் விடுதலைச் சிறுத்தைகள் இம்மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
திடீர் சாலை மறியலைக் கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து குவிந்தனர். கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் போராட்டத்தைக் கைவிட்டு வண்டியில் ஏறுங்கள் என்று வற்புறுத்தினர். ஆனாலும் காவல்துறையினர் வற்புறுத்தலையும் மீறி அரைமணி நேரம் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களும் நூற்றுக் கணக்கில் திரண்டுவிட்டனர். பின்னர் அனைவரையும் கைது செய்து கோயம்பேடு ஜெய நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்கள் வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், கவுதமசன்னா, தேவராஜ், பார்வேந்தன், எஸ்.எஸ்.பாலாஜி, இளஞ்சேகுவேரா, சங்கத்தமிழன், மற்றும் சுகுணா, பொற்கொடி, சின்னத்தாய், ரோசி வேலாயுதம் உள்ளிட்ட மகளிர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளனர்.
கோயம்பேடு பகுதியில் மட்டுமின்றி பனகல் பூங்கா, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ந்து அணி அணியாக கைதாகியவண்ணம் உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக