இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிக்கை!


தமிழகத்தில்  ஏராளமான  இசுலாமியர்கள் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிவருகின்றனர்.

தமிழக அரசு 1987 ஆம் ஆண்டு முதல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, பத்தாண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது. கடந்த 2008, ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 1405 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் இசுலாமியர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. அப்போது விடுதலையானவர்கள் என்னென்ன சட்டப்பிரிவுகளில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனரோ, அதே சட்டப்பிரிவுகளின் படியே இசுலாமியர்களும் சிறையிலுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சென்று கணக்கெடுத்துப் பார்த்தால், பொய் வழக்குகளிலும்; சந்தேக வழக்குகளிலும் அதிகம் சிறைபடுத்தப்பட்டவர்களாக வாடிக்கொண்டிருப்பவர்கள்,  தலித்துகளும் இசுலாமியர்களும்தான் என்கிற உண்மை வெளிப்படும். இசுலாமியர்களின் சமூக பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்த சச்சார் குழுவின் அறிக்கை இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தண்டனைப் பெற்ற இசுலாமியர்களுக்கு, சட்டப்படி வழங்கப்பட வேண்டிய உரிமைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சாதாரண சலுகைகள் கூட, அவர்கள் இசுலாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுகின்றன. இசுலாமியர்களைப் போலவே நளினி உள்ளிட்ட அரசியல் கைதிகளும் இந்த அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு இந்த ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில், பத்தாண்டுகளைக் கடந்து சிறையில் வாடும் இசுலாமியர்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 01-09-2012 சனி அன்று மாலை, சென்னை அரசுப் பொது மருத்துவமனை எதிரிலுள்ள மெமோரியல் ஹால் அருகே, இந்திய தேசிய லீக் நடத்தும் அறப்போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.

ஒடுக்கப்பட்ட நம் சொந்தங்களின் விடுதலைக்காக குரல் எழுப்ப, ஜனநாயக சக்திகள் அனைவரும் திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இவண்

திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக