விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்
விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு மற்றும்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற
விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பாராட்டு விழா
16-11-2011 பெரியார் திடல், சென்னை
தீர்மானங்கள்
1. தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் தமிழகக் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான வெறியாட்டத்தில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலியான வெள்ளைச்சாமி, கணேசன், பன்னீர், முத்துக்குமார், தீர்ப்புக்கனி, ஜெயபால் ஆகியோருக்கும், அதற்கு முன்னர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மண்டலமாணிக்கம், பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனிகுமாருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது. அத்துடன் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இந்த மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
2. பரமக்குடியில் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அரச பயங்கரவாத அடக்குமுறையை ஏவிய காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அத்துடன் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், படுகொலையானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இச்செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது. மேலும் நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு மாற்றாக, மையப் புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
3. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சொந்தச் சின்னம் இல்லாத நிலையிலும், போதிய பொருளாதார வலிமையற்ற நிலையிலும், ஆளும் கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தினரின் அத்துமீறல்களைத் தாண்டியும் விடுதலைச் சிறுத்தைகள், ஒன்றியக் குழு, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களாக, கணிசமான அளவில், தமிழகமெங்கும் பரவலாக வெற்றி பெற்றுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாகவும் நூற்றுக் கணக்கானோர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இந்த மாநிலச் செயற்குழு மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததுக் கொள்கிறது.
4. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள-பெளத்த பேரினவாத ஆட்சியாளர்களுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நார்வே அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஈழச் சிக்கலில் அரசியல்ரீதியான தீர்வு காண்பதற்கு இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதிலேயே முனைப்பாக செயல்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் இனத்திற்கும், தமிழீழத்திற்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்திய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை உறுதிப்படுத்தியுள்ள நார்வே அரசின் அறிக்கை தொடர்பாக, இந்திய அரசு அனைத்துலகச் சமூகத்திற்கு உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
5. சிங்கள இனவெறிக் காடையர்களால் தமிழக மீனவர்கள் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து தாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் நீடித்து வருகிறது. அண்மையில் இந்திய தலைமை அமைச்சர் திரு. மன்மோகன் சிங் அவர்களும், சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராஜபக்சேவும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடிய பின்னரும் சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் தொடர்ச்சியான காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எத்தகைய முனைப்பும் காட்டாத இந்திய மற்றும் தமிழக அரசுகளின் போக்குகளை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இது தொடர்பாக இந்தியத் தலைமை அமைச்சரைச் சந்தித்து முறையிடுவதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
6. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதான கொலைத் தண்டனையை விலக்குவதற்கு தமிழக அரசு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு மாண்புமிகு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
7. மின் உற்பத்திக்கென இந்திய அரசு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற வல்லரசுகளுடன் உடன்பாடு செய்துகொண்டு ஆங்காங்கே அணுமின் உலைகளை நிறுவி வருகிறது. அதன்படி ரஷ்யப் பேரரசுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய அரசு கூடங்குளத்திலும் அணுமின் உலையை நிறுவியுள்ளது. அணுமின் உலைகளால் பரவும் கதிர்வீச்சு தொடர்ச்சியாக பல தலைமுறைகளைப் பாதிக்கும் என்பது நடைமுறை உண்மையாக நிலவுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளில் புதிதாக அணுமின் உலைகள் நிறுவப்படுவதில்லை என்றும், ஏற்கனவே நிறுவப்பட்ட அணுமின் உலைகளையும் மூடுவதற்கு அணியமாகி வருகின்றனர் என்றும் தெரியவருகிறது. இந்நிலையில், இந்திய அரசு அணுமின் உலையை நிறுவுவதில் தீவிரம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை. எனவே, கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அவ்வணுமின் உலைத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டுமெனவும் ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வருகிற அணுமின் உலைகளையும் விரைந்து மூட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அத்துடன், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுமின் உலையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 11 முதல் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை நசுக்கும் வகையில் ஆட்சியாளர்கள் போராட்டக் குழுவினர் மீதும் ஆதரவாளர்கள் மீதும் தொடர்ச்சியாகப் பொய் வழக்குகளைப் புனைவதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அவ்வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
8. தமிழக அரசு அண்மையில் சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டுமெனவும், அவர்கள் அனைவரையும் "தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்'படி மீண்டும் பணியமர்த்தம் செய்ய வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
9. கோட்டூர்புரத்தில் இயங்கி வருகிற பேரறிஞர் அண்ணா நினைவு நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழக அரசின் இந்நடவடிக்கையானது பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது. அத்துடன், பேரறிஞர் அண்ணாவின் மீது நன்மதிப்பு வைத்துள்ள ஒவ்வொருவரையும் இந்த நடவடிக்கை பாதிப்படையச் செய்துள்ளது. எனவே தமிழக அரசு இந்நடவடிக்கையைக் கைவிட்டு, அந்நூலகம் அங்கேயே தொடர்ந்து இயங்குவதற்கு ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
10. தமிழகமெங்கிலும் அரசு மதுபானக் கடைகளால் இளையதலைமுறையினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை பெருகி வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் வருமானத்தை மட்டுமே இலக்காக வைத்து அரசு மேலும் வசதி படைத்தோருக்கென "எலைட்' மதுபானக் கடைகளைத் திறக்கப் போவதாக அறிவிப்புச் செய்துள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய கடைகளைத் திறக்கும் முயற்சியை கைவிடுவது மட்டுமல்லாமல், ஏற்கனவே இயங்கி வருகிற அனைத்து மதுபானக் கடைகளையும் முற்றாக இழுத்து மூட வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசை வற்புறுத்துகிறது.
11. குற்றப் புலனாய்வு என்னும் பெயரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்நிலையங்களில் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடித்துவருகிறது. காவல்நிலையப் படுகொலைகள் தொடர்பாக எத்தகைய விசாரணையும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள அனைத்து காவல்நிலையப் படுகொலையும் விசாரிப்பதற்கென தனி விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமென இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. மேலும் காவல்நிலையப் படுகொலைகள் நிகழாத வகையில் உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய, தமிழக அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
12. கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக நடைபெற்றுள்ளன என்றாலும் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பில் மேலும் சில மாற்றங்களைச் செய்வதென இந்தச் செயற்குழு தீர்மானிக்கிறது. அதாவது, கட்சியின் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்பில், ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகத்திற்கு மாறாக, நிர்வாக வசதிக்கான தேவையின் அடிப்படையில், ஒரு மாவட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட நிர்வாகங்களாகப் பிரித்து, அதனடிப்படையில் மாவட்டச் செயலாளர்களையும் பிற பொறுப்பாளர்களையும் நியமனம் செய்வதெனவும் இச்செயற்குழு முடிவு செய்கிறது.
1 comments:
nam athigamaga ulla 7 mavatangalai therntheduppom athil oru nalaiku oru girama payanam thalivar merkkolla vendum appadi merkkondral nam 20 MLA thoguthiai kaipattralam
கருத்துரையிடுக