துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை கைகளால் அள்ளும் நிலை -நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம் - நாடாளுமன்றத்தில் திருமாவளவன் M.P ஆதங்கம்




மகளிர் சுய உதவி குழுக்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு இரயில்வே நிலையங்களில் கடைகள் நடத்த முன்னுரிமை வேண்டும்!

இரயில்வேயில் துப்புரவுப்பணிக்கு தானியங்கி கருவிகளை பொறுத்த வேண்டும்!



நாடாளுமன்றத்தில் இரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில்

தொல். திருமாவளவன் உரை.

08-07-2009


அவைத்தலைவர் அவர்களே, எனக்கு இந்தவாய்ப்பை கொடுத்தமைக்காக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்


நம் நாட்டில் இரயில்வே துறை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட போது மும்பை-தானேவுக்கு இடையேதான் போக்குவரத்து மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது உலகிலேயே மிகப்பெரிய துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது என்று சொல்லுவதில் பெருமை கொள்கிறோம். இந்த வளர்ச்சி தெளிவற்ற வளர்ச்சிதான் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், இந்த வளர்ச்சி சமூகத்திற்கு தரும் பயன்களின் அடிப்படையில் அமையாமல் பொருளாதார ஆதாயங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த இரயில்வே பட்ஜெட்டை சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளார். பயணிகளின் வசதி, தூய்மை, தரமான உணவு, பாதுகாப்பு மற்றும் நேரந்தவறாமை, போன்றவற்றை பற்றி குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தொடர்வண்டித்துறை அமைச்சரை நான் பாராட்டுகிறேன்.



ஆனால், தொழிலாளர்கள் நலன்-குறிப்பாக கிளாஸ் IV தொழிலாளர்கள் நலன் பற்றி மாண்புமிகு அமைச்சர் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இரயில்வே துறையின் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை கைகளால் அள்ளும் நிலை உள்ளது. இது நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம். எனவே மனிதக்கழிவுகளை அகற்றுவதற்கு அரசு தானியங்கி கருவிகளை பொறுத்த வேண்டும். அவ்வாறு தானியங்கிக் கருவிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பின் அந்தத் தொழிலாளிகளுக்கு வேறு வகையான பணிகளை கொடுக்கலாம்.



தலைவர் அவர்களே, மய்ய அரசு, மாநில அரசுகள் மற்றும் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை. ஆனால் தொடர்வண்டித் துறை கிளாஸ் IV தொழிலாளர்களுக்கு மட்டும் 12 மணி நேர வேலை. இது இத்தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியகும். எனவே அரசு இவர்களது வேலை நேரம் 12 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக குறைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



‘ஆதர்ஷ்’ என்ற பெயரால் உலகத்தரம் வாய்ந்த இரயில்வே நிலையங்கள், ‘இசாத்’ என்ற பெயரால் ஏழைகளுக்கு இலவச பாஸ் என இந்த இரயில்வே பட்ஜெட்டில் பாராட்டுதலுக்குரிய பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச பாஸ் பெறுவதற்கு வருமான வரம்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பிற்குள் பெரிய அளவு மக்கட்தொகை இல்லை. எனவே அதனை நீக்கினால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைவரும் இந்த இலவச பாஸ் வழங்கும் திட்டத்தினால் பயனடைவார்கள். இது என் பணிவான வேண்டுகோளாகும்.



மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பெண்களுக்கான சிறப்பு இரயில், இளைஞர்களுக்கான சிறப்பு இரயில் மற்றும் இடையில் நிற்காமல் செல்லும் 'டுரன்டோ' இரயில் ஆகிய திட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.



மேலும் அகல இரயில் பாதை மாற்றும் திட்டதிலுள்ள சில குறைகளை இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். 2009-10க்கென ஒரு இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1300 கிமி அளவிலான வழித்தடங்கள் பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான வழித்தடத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த வழித்தடம் கிட்டத்தட்ட 4 மாவட்டங்களுக்கு உயிர் நாடியாக விளங்கும் வழித்தடமாகும். 5 ஆண்டுகளுக்கும் மேல் இந்த வழித்தட மூடியிருப்பதால் அண்ணாமலை பல்கலைகழகத்தச் சார்ந்தவர்களும், மாணவர்களும், விவசாயிகளும், உழைக்கும் மக்களும் மிக மோசமாக பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளர். கொள்ளிடம் ஆற்றுக்கு மேல் செல்லும் பாலத்தில் மட்டும் வேலை நிலுவையில் உள்ளதாக நான் அறிகிறேன். எனவே இந்தப் பணியை மாண்புமிகு அமைச்சர் விரைவு படுத்தி இந்த வழித்தடத்தில் இரயில் போக்குவரத்தை உடனடியாக தொடங்குவதற்கு ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.



அதைப் போலவே மகளிர் சுய உதவி குழுக்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு இரயில்வே நிலையங்களில் கடைகள் நடத்தும் அனுமதியளிப்பதில் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும் இரயில்வே மாளிகைகளில் உதவியாளர், துப்புரவுத்தொழிலாளார் நியமனத்தில் உள்ள இட ஒதுக்கீட்டில் சுழற்சி முறை கையாளப்படவேண்டும் என்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அதைப் போலவே இரயில்வே துறையில் மனிதக்கழிவுகளை மனிதர்களே துப்புரவு செய்வது பற்றி ஒரு வெள்ளைஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.



விழுப்பிரம்-திண்டுக்கலுக்கு இடையேயான பாதையில் இரண்டு அகல இரயில் பாதையும் கும்பகோணம்-அரியலூருக்கு இடையே புதிய அகல இரயில் பாதையும் அரியலூர்-சேலம் இடையே அகல இரயில் பாதையும் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 8 புதிய திட்டங்களுக்கு மாநில அரசு 50% பங்காக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது மாநில அரசுகளுக்கு போதுமான வருவாய் இல்லாததால் ஈந்த நிபந்தனை ஏற்புடையதல்ல. எனவே எல்லா திட்டங்களுக்கான முழு பொறுப்பையும் இரயில்வே துறையே ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு நிறைவு செய்கிறேன்.



நன்றி.


இவ்வாறு உரையாற்றினார் .........



0 comments:

கருத்துரையிடுக