தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்ருக்கு தனி அமைச்சகங்கள் வேண்டும்! - மன்மோகன்சிங்கிற்கு தொல். திருமாவளவன் கடிதம்!


தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஊனமுற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள்

ஆகிய பிரிவினர்களுக்கென தனி அமைச்சகங்கள் வேண்டும்!



மன்மோகன்சிங்கிற்கு தொல். திருமாவளவன் கடிதம்!


சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஊனமுற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் அகிய பிரிவினர்களுக்கென தனித்தனி அமைச்சகங்கள் அமைப்பதற்கு பிரதமர் முயற்சி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.



அதன் விவரம் பின் வருமாறு;


மதிப்பிற்குரிய மன்மோகன்சிங் அவர்களே!


கடந்த 08.06.2009 ஆம் நாள், நாடாளுமன்ற மக்களவையில் எனது கன்னிப்பேச்சில், பழங்குடியினருக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டிருப்பதைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.



2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒட்டு மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் 16.23 விழுக்காடு உள்ளனர் என்பதையும் அவர்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வாழ்கிறார்கள் என்பதையும் தாங்கள் அறிவீர்கள். அவர்களது சிக்கல்கள், மிகுந்த கடினமானவையாகவும் பலவகைப்பட்டவையாகவும் உள்ளன. இவர்களது சமூக-பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக மைய்ய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றன. இருந்தாலும் பொதுச்சமூகதிற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெரிய இடைவெளி உள்ளது. அவர்கள் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். அவர்களது கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி மனநிறைவைத்தருவதாக இல்லை. கிராமப்புரங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் மொத்த மக்கட்தொகையில் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேளாண்தொழிலுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். அவர்களுள் மிகச்சிலரே சொந்த நிலம் வைத்துள்ளவர்களாவர். மற்ற அனைவருமே நிலமற்ற வேளாண்தொழிளாலர்களாவர். இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுள் மிகச்சிலவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளேன். நாடெங்கிலும் இன்றளவிலும் உள்ள தீண்டமையே தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திதிக்கும் மிகப்பெரும் கொடுமையாகும். இதனை முற்றிலும் ஒழிக்க குவிமய்யப்படுத்தப்பட்ட மிகப்பொ¢ய முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.



தற்போது சமூக நீதித்துறைக்கு, தாழ்த்தப்பட்ட மக்களின் நலங்கள் மட்டுமன்றி பிற்படுத்தப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் ஆகிய பிரிவை சார்ந்தவர்களின் நலங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் தனிகவனம் செலுத்தப்படவேண்டிய மிகப்பெரிய சிக்கல்களாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் குலத்தொழில், கல்வியில் உள்ள வேறுபாடுகள் போன்ற சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். 19 ஆண்டுகளுக்கு முன்புதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மேம்பாட்டுக்காகவும் இந்திய அரசு முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்ந்தது என்பது துரதிஷ்டவசமானதாகும். உடலளவிலும், மனதளவிலும் ஊனமுற்றவர்கள் மற்றும் மூத்தகுடிமக்கள் தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களைப் போலல்லாமல் சமூகத்தின் மற்றொரு பிரிவினராவர். அவர்களுடய சிக்கல்களும் தனியாக கவனிக்கப்பட வேண்டியவையாகும்.



எனவே இத்தகைய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு தனி அமைச்சகமும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒரு தனி அமைச்சகமும் ஊனமுற்றோர், மூத்தகுடிமக்கள் போன்ற பிற பிரிவினருக்கென தனித்தனி அமைச்சகங்களும் உருவாக்கப்பட்டால்தான், இப்பிரிவுகளைச்சார்ந்த மக்கள் அனைவரும் அவரவர் எதிர்கொள்ளும் வெவ்வேறு சிக்கல்களின் தன்மைக்கேற்றபடி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அரசின் முழுக்கவனத்தையும் பெற முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



எனவே தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஊனமுற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் அகிய பிரிவினர்களுக்கென தனித்தனி அமைச்சகங்கள் அமைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு அமைச்சகங்கள் அமைக்கப்பெற்றால் இந்த பிரிவுகளைச்சார்ந்த மக்கள் உங்கள் முயற்சியை பெரிதும் பாராட்டுவார்கள்.





நன்றி

தங்கள் உண்மையுள்ள,

(தொல். திருமாவளவன்)



இவ்வாறு அந்த கடிதததில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 comments:

கருத்துரையிடுக