இந்திய அரசுதான் ஈழத்துப் படுகொலைகளுக்குக் காரணம் -திருமாவளவன்



ஜூனியர் விகடன் இதழுக்காக சிறுத்தைகளின் தலைவன் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களை செவ்வி உங்களுக்காக :

''ஈழ விவகாரம் குறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு காங்கிரஸ் தரப்பை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

''நான் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பேசுகிறேன் என்பதால், அன்றைக்கு அடக்கி வாசித்தேன். பாபர் மசூதி தொடங்கி கிராமங்களில் நிலவும் சாதிய வேறுபாடுகள் வரை, சகல ஆதங்கங்களையும் பட்டியல் போட்டுப் பேசினேன். ஆனாலும், என் மனம் முழுக்க மண்டிக் கிடந்தது ஈழத்து சோகங்கள்தான். நம் கண்ணெதிரே நம் இனம் பூண்டோடு வேரறுக்கப்பட்டிருக்கிறது. விடுதலைக்காகப் போராடியவர்கள் ஈவு இரக்கமற்று வீழத்தப்பட்டிருக்கிறார்கள். கற்பனைக்கும் எட்டாத அவமானங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் ஆளாகி, ஈழத் தமிழினம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், 'தமிழர்களாகப் பிறந்த நாங்கள் என்ன பாவம் செய்தோம்..? நாங்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களா, இல்லையா..? ஏன் எங்களை மட்டும் ஒதுக்கிவைத்து ஓரவஞ்சனை காட்டுகிறீர்கள்?' என்று நாடாளுமன்றத்தில் என் மனவேதனையைக் கொட்டினேன். மற்றவர்களின் மனம் குளிரப் பேசுவதற்காக மக்கள் என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை. இனத்தின் நலனைத் தாண்டி எவர் மனதையும் குளிரவைக்கும் அவசியமும் எனக்கில்லை.

இப்போதும் சொல்கிறேன்... இந்திய அரசுதான் ஈழத்துப் படுகொலைகளுக்குக் காரணம். தமிழினம் அழிக்கப்பட்டதற்கு இந்திய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். ஈழ விவகாரத்தில் இந்தியாவின் பங்கு குறித்த வெள்ளை அறிக்கையை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளும்விதமாக இந்திய அரசு வெளியிட வேண்டும். சிங்கள அரசின் அரக்கத்தனமான கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு அரைகுறை உயிரோடு அல்லாடும் தமிழ் மக்களுக்குப் பாவம் செய்த இந்தியா, உடனடியாகப் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். அவர்களைக் காக்க உடனடியாக உதவி வழங்க வேண்டும். நிராதரவு ஜீவன்களாக அல்லாடும் ஈழத் தமிழினத்துக்கு இனியாவது விடிவு பிறக்க வேண்டும்.'

''காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களுக்கு எதிராக நீங்கள் பேசுவது தி.மு.-வுக்குத் தலைவலியைத் தராதா?''

''வெற்றிக்குப் பிறகு டெல்லியில் கூட்டப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி விழாவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினார்கள். அதில் என்னையும் பேசச் சொல்லி சோனியா காந்தியே வற்புறுத்தினார். தனி ஈழத் துக்காகப் போராடிய போராளிகளும் பொதுமக்களும் முற்றாக அழிக்கப்பட்டதாக செய்திகள் வந்துகொண்டு இருந்த நேரமது... அதனால், மௌன சாட்சியாகத் துடித்துக்கொண்டிருந்த நான், என் கட்டுப்பாட்டையும் மீறி அங்கே கொந்தளித்துவிடுவேனோ என்று தயங்கிப் பேசாமல் அமர்ந்துவிட்டேன். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களின் வற்புறுத்தலையும் அன்றைக்குத் தவிர்த்துவிட்டேன்.

தி.மு.க-வின் நிலைப்பாட்டை மனதில் வைத்துச் சொல்கிறேன்... தமிழினத்துக்காக நான் குரல் கொடுப்பது ஒருபோதும் அவர்களுக்குத் தலைவலி ஆகாது. ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி, தள்ளாத வயதிலும் முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். கூட்டணி மரியாதைக்காக இனத்தின் வேதனைகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா? தோழமைக் கட்சி என்பதற்காக நான் காங்கிரஸின் தமிழ் விரோதப் போக்கைத் தட்டிக் கேட்காமல் இருந்துவிட முடியுமா?

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதற்காக இந்திய நாடாளுமன்றமே கொந்தளிக் கிறது. மேற்கு வங்காள வெள்ள பாதிப்புகளை தேசியப் பேரழிவாகச் சொல்லி அலறிப் புடைக்கிறார்கள். ஆனால், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இந்திய அரசின் ஆயுத உதவியுடனேயே அழிக்கப்பட்ட கொடூரத்தைப் பற்றிப் பேச மட்டும் நாதியில்லை. தமிழினத்துக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்?

காங்கிரஸ் மட்டுமல்ல, அத்வானி, லாலு, சரத் யாதவ் போன்றோர்கூட மனிதாபிமான அடிப்படையில் ஈழத்துக்காகக் குரல் கொடுக்கவில்லை. போர் என்ற பெயரில் இனவெறியோடு பொதுமக்கள் அழிக்கப்பட்ட கொடூரத்தை சிங்கள அரசின் தலைமை நீதிபதியே பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தியாவில்தான் தமிழனின் தலைவிதி பற்றிப் பேச யாருமில்லை. அதனால், வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் தமிழின சோகம் குறித்துத்தான் பேசவிருக்கிறேன். என் இனத்தின் பாதிப்பு களைவிட வேறெந்த விஷயங்களையும் இப்போதைக்கு நான் பேச வேண்டிய அவசியமில்லை.''

''வடக்கத்திய தலித் தலைவர்கள் பலரும் தோல்வி அடைந்ததால், தலித் பிரதிநிதித்துவ அடிப்படையில் உங்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், காங்கிரசுக்கு எதிரான போக்கால்தான் உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை என்றும் பேச்சிருக்கிறதே..?''

''அமைச்சர் பதவிக்காக நான் பெரிதாக முயற்சி எடுக்கவில்லை. இப்போதுதான் முதல் முறையாக ஜெயித்திருக்கிறேன். டெல்லியில் புதுமுகமாக அடியெடுத்து வைத்திருக்கும் எனக்கு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முழுவதுமாகப் புரியவே சில காலம் பிடிக்கும். எந்த விஷயமும் புரியாமல் 'திடீர் மந்திரி'யாகி என்ன செய்ய முடியும்? அப்படியே அமைச்சரவையில் எனக்கு இடம் கிடைத்திருந்தாலும், தமிழின சோகங்கள் குறித்த என் குரல் அமுங்கிப்போயிருக்காது. கால் ஒடிந்த பறவைக்குத் தங்கச் சிறகு செருகினாலும், அது காயத்தின் வலியில் கதறிக் கொண்டுதானே இருக்கும்..?''

''சக கட்சி என்பதையும் தாண்டி, பா... தலைவர் ராமதாசுடன் நெருக்கம் பாராட்டி யவர் நீங்கள். எதிர் கூட்டணியில் இருந்தபடி பா... அடைந்த தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''ஒரு தேர்தலின் வெற்றி தோல்வியை வைத்து அக்கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஓர் அணியை அமைத்து அதற்குத் தலைமையேற்கிற வாய்ப்புக் கிடைத்தும், அதை மருத்துவர் ராமதாஸ் தவற விட்டுவிட்டதைத்தான் என்னால் இப்போதும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. மருத்துவரும் வைகோவும் தி.மு.க-வைத் தோற்கடிப்பதில்தான் குறியாக இருந்தார்களே தவிர, ஈழத்துப் போரைத் தடுக்கிற எண்ணம் அவர்களிடம் இல்லை. அவர்கள் அ.தி.மு.க-வுக்கு முட்டுக் கொடுத்ததால் மக்கள் வழங்கிய தீர்ப்பு, ஈழ விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடே சரி என்கிற தோற்றத்தை உண்டாக்கிவிட்டது...'' என்று மனதில் பட்டதை வழக்கம்போல் பட்டென்று போட்டு உடைத்தார் திருமா வளவன்!



நன்றி : www.vikatan.com



0 comments:

கருத்துரையிடுக