'போர்முனைக்குப் போய் வந்தேன்...'
தி.மு.க. கூட்டணியை மூச்சுத் திணற வைக்கிறது ஈழ விவகாரம். 'ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த கூட்டணி' என எதிர்க்கட்சிகளால் சாடப்படும் தி.மு.க. கூட்டணியில் இருந்தே ஒருவர் தமிழகத் திலிருந்து கடல் மார்க்கமாக வன்னிக் காடுகளுக்குச் சென்று புலிகளின் முக்கிய தளபதிகளைச் சந்தித்து திரும்பியிருக்கிறார்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தளபதியாகவும் அவர் நடத்தும் தாய்மண் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருக்கும் வன்னி அரசுதான் இந்த சர்ச்சைப் பயணத்துக்கு சொந்தக்காரர்.
உளவுத் துறை வன்னி மீது ஒரு கண் வைத்திருக்கிற நிலையில், நாம் வன்னி அரசுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
''தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தினரை சந்திக்க நீங்கள் மேற்கொண்ட பயணம் தேச விரோதம்தானே? எப்போது இந்த பயணம் நிகழ்ந்தது?''
''புலிகள் அமைப்பு, இன விடுதலைக்கான போரை நடத்துவதாகத்தான் உலகத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இன்றைய அரசியல் அரங்கில் தனி ஈழம், புலிகள் இன விடுதலையாளர்கள் என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. இனத்துக்காக கடல்மார்க்கமாக நான் மேற்கொண்ட பயணம் தேச விரோதம் ஆகாது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடைபெறும் சமயத்தில்தான் நான் ஈழப் பயணம் மேற்கொண்டேன். அதாவது சுமார் மூன்று மாதங்களுக்கு முன்!''
''எதற்காக ஈழம் சென்று வந்தீர்கள்?''
''ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் இஷ்டத்துக்கு இங்கே மேடைகளில் முழங்குகிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால், என்தலைவர் திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக எதையும் எதிர்கொள்ள துணிச்சலைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் தந்த பாடத்தினால்தான் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை அப்படியே படமாக்கத் திட்டமிட்டு அங்கே போனேன்.''
''சிங்கள ராணுவத்தின் குண்டு வீச்சுக்கு இடையிலா சுற்றினீர்கள்?''
'அங்கு பூநகரி, விசுவமடு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, பரந்தன் ஆகிய இடங்களில் நான் பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது, சிங்கள ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் செவி கிழித்துக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக சிதறிக் கொண் டிருந்தனர். அந்த குரூர நிமிடங்களை பதற்றத்துக்கிடையே காட்சிகளாகப் பதிவு செய்தேன். நான் பயணம் செய்த வண்டியை ஓட்டியது முருகன். எனக்கு கேமரா பிடித்தது கோமகன், படப் பதிவுகளை
உடனுக்குடன் எடிட் செய்து கொடுத்தது சீராளன். நான் பதிவு செய்ய வேண்டிய காட்சிகளை முடித்து அதை 'எமக்காகவும் பேசுங்கள்' என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படமாக தயாரித்தேன்.
வேலைகள் முடிந்து நாங்கள் பயணம் செய்தபோது, காரை ஓட்டிய முருகன் மீது குண்டுவிழ, என் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் ரண உடலாக அவர் உயிர் நீத்தது இன்னும் நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரின் மதிப்பு என்னவென்று
அங்கே உணர முடிந்தது. இந்தத் தாக்கத்தில் இருந்த என்னை கோமகன்தான் தேற்றினார். ஆனால்... கொடுங்குண்டுகள் மீண்டும் தாக்க ஆரம்பித்தன. அப்போது என் மேல் குண்டு விழ... நொடிப் பொழுதில் என்னைத் தள்ளிவிட்டு, அந்த குண்டுக்கு இரையானார் கோமகன். மிச்சமிருந்தது சீராளன் மட்டும்தான். விசுவமடு பகுதியை தாண்டி நாங்கள் அடுத்த பகுதிக்குள் சென்றோம். அந்தப் பகுதியில் வான்வழித் தாக்குதல் தீவிரமாக இருந்தது. ஒரு கட்டத்தில் என்னை ஒரு பதுங்கு குழிக்குள் தள்ளினார் சீராளன். 'நீங்களும், அந்தக் காட்சிகளும் தமிழகத்துக்குப் போய்ச் சேர வேண்டும். எங்களைப் பற்றி யோசிக்காதீர்கள். சொல்வதை மட்டும் செய்யுங்கள்...' என அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த கொடுமையும் நிகழ்ந்தது. என்னைப் பாதுகாத்த சீராளன் ரத்தச் சிதறலாக துடிதுடித்து இறந்தார். அப்போது கூட 'காட்சிகளும் நீங்களும் பத்திரமண்ணா' என்ற அவருடைய வார்த்தைகள் காதுக்குள் பத்திரமாக இருக்கின்றன. நான் வந்த நோக்கம், அந்தப் பகுதி மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஈழத் தோழர்கள் ஒவ்வொருவரும் என்னை பத்திரப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். அவர்களால் உயிரோடு மீண்டுவந்த நான் எடுத்த காட்சிகளை முதல்வர் கலைஞரிடம் கொடுத்தேன். போட்டுப் பார்த்துவிட்டு, 'காட்சிகளை குடும்பத்தோடு பார்த்து கலங்கி விட்டேன்' என்று சொன்னார்.''
''உயிரைப் பணயம் வைத்து பயணம் மேற் கொண்ட நீங்கள் ஏன் காங்கிரஸ் கூட்டணியில்சேர்ந்தீர்கள்?''
''நான் சந்தித்த புலித் தலைவர்கள், 'தமிழகத்தில் ஆளும் கூட்டணியில் இருந்தே எங்களுக்கான தீர்வை காண முயலுங்கள்!' என்று சொன்னார்கள். தமிழ் உணர்வாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட சீமானும், எதிரணித் தோழர்களான வைகோ, ராமதாஸ் போன்றவர்களும் ஈழத் தாய் என்று ஜெயலலிதாவை குறிப்பிடுகிறார்கள். இது ஈழத்தை கொச்சைப்படுத்தும் சொல். உண்மையில் பூபதியம்மாள் என்பவரைத்தான் ஈழத் தாய் என்று அங்கே மக்கள் வணங்குகிறார்கள். ஈழ விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டவர் அந்த அம்மையார். நேற்று வரை ராஜபக்ஷேவுக்கு சாமரம் வீசி விட்டு, ஓட்டு அரசியலுக்காக தனி ஈழ கோஷத்தை கையில் எடுத்திருக்கும் ஜெயலலிதாவை ஈழத் தாய் என்று வர்ணிப்பது கேவலம். தமிழ் உணர்வாளர்கள் வெற்றி பெற வேண்டுமானால் இயக்குநர் சீமான் போன்றவர்கள் சிதம்பரத்திலும் பிரசாரம் செய்ய வேண்டும். தமிழ் ஈழ அங்கீகார மாநாட்டை தைரியமாக நடத்திய எங்கள் தலைவரை விட, இங்கே யாருக்கு ஈழ விடுதலையின் மீது அக்கறையிருந்து விடப் போகிறது. புலிகளுக்கான தடையை முதலில் அமல்படுத்திய மாநிலம் தமிழகம்தான். புலிகள் தடையை அமல்படுத்தச் சொல்லி நிர்ப்பந்தித்த மாநிலமும் தமிழகம்தான். அப்போது முதல்வராக இருந்தது ஜெயலலிதாதான் என்பதை மறக்கக் கூடாது. இன்று எதிர்க்கட்சி வரிசையில் நின்று வெறும் கோஷம் போட்டு விட்டு கலைந்தால், ஈழத் தமிழனுக்கு என்ன கிடைக்கப் போகிறது. அதுவும் ஜெயலலிதா பின்னால் இருந்து கோஷம் போட்டால் எதுவும் நடக்காது என்பது மருத்துவர் ராமதாஸ§க்கும், வைகோவுக்கும் நன்றாகத் தெரியும். தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் இருவரும் அந்த அம்மையாரை விட்டுப் பிரிந்து எங்களுடன் இணைந்து ஈழத்துக்காக கோஷம் போடுவார்கள்!''
-- எஸ்.சரவணகுமார்
நன்றி : ஜீனியர் விகடன் மே13 2009
0 comments:
கருத்துரையிடுக