தேர்தலுக்கு பிறகும் ஜெ. தனிஈழம் பற்றி பேசுவாரா? திருமாவளவன்
தேர்தலுக்கு பிறகும் ஜெயலலிதா தனி ஈழம் பற்றி பேசுவாரா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து விழுப்புரத்தில் பேசிய அவர்,
அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவரது வாய்க்கு போயஸ் தோட்டத்தில் பிளாஸ்திரி ஒட்டித்தான் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள். தொகுதியின் மேம்பாடு, கோரிக்கைகள் பற்றி பேசவே முடியாது. எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இன்று அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இவைகள் கடந்த காலங்களில் ஜெயலலிதாவை குறை கூறியவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார்கள். தனிஈழம் என்று பேசும் ஜெயலலிதா, இந்த தேர்தலுக்கு பிறகும் பேசுவாரா? தமிழன் வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? என்ற மனம் கொண்டவர் அவர். ஆனால் கருணாநிதி என்றும் தமிழுக்காக போராடக்கூடியவர். எங்களை வன்முறை கட்சி என்று கூறினார்கள். வன்முறைக்கு எதிரானவர்கள் நாங்கள்.
தருமபுரியில் கல்லூரி மாணவிகளை உயிரோடு கொளுத்தியது யார்? கடந்த 1987ல் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி போட்டது யார்? ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியது யார்? கடந்த 1992ல் நான் போட்டியிட்ட போது, லாரிகளில் வந்து குடிசைப்பகுதிகளுக்கு தீ வைத்தது யார்? இவ்வாறு வன்முறை செய்தவர்கள் எங்களை வன்முறையாளர்கள் என்கிறார்கள்.
நான் பாமகவில் இருந்தால் அன்புத்தம்பி என்று பேசும் ராமதாஸ், இப்போது வம்புக்கார தம்பி என்கிறார். இன்று கலைஞர் ஆட்சியில் திருமண உதவித்தொகை, இலவச மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற சாதனைகள் மேலும் தொடர இங்கு போட்டியிடும் சாமிதுரைக்கு நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.
1 comments:
தேர்தலுக்கு பிறகு ஈழத்தை ஆதரித்து பேசுபவர்களை சிறையில் தள்ளாமல் இருந்தால் சரி. அம்மா ஆட்சிக்கட்டில் ஏறட்டும் இந்த வைகோ, ராமதாஸ், சீமான், திருமா உள்ளீட்டோர் சிறை கம்பிகளை எண்ணுவது நிச்சயம்.
கருத்துரையிடுக