இலங்கை தமிழர் படுகொலையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: சோனியா காந்திக்கு திருமா வேண்டுகோள்



இலங்கை தமிழர் படுகொலையை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைத்தீவில் நடைபெறும் இனப்படுகொலை மனித நேயமுள்ள ஒவ்வொரு வரையும் மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 9,985 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.


இது தொடர்பாக அண்மையில் டெல்லியில் வந்திருந்த ஐ.நா. மனித உரிமை அமைப்பின் செயலாளர் நவநீதம் பிள்ளை இந்த அதிர்ச்சியான உண்மையை வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து இந்திய அரசு அமைதி காப்பதும் வேடிக்கை பார்ப்பதும் மனித நேயமுள்ள ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்குள் ஆழ்த்துகிறது.

சர்வதேசச் சமூகத்தையே உலுக்கியிருக்கிற சிங்கள இனவெறியர்கள் நடத்தும் மனிதப் பேரவலம் தொடர்பாக இந்திய அரசு கருத்து ஏதும் கூறாமல், தடுப்பு நட வடிக்கை மேற் கொள்ளாமல் சிங்களவர்களை ஊக்கப் படுத்தும் வகையில் நடந்து கொள்வது சகித்துக் கொள்ளவே முடியாததாக உள்ளது.

தமிழக மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிற இந்த இனப்படுகொலை பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்திய அரசோ, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியோ இதில் விரைந்து தலையிட்டு போர் நிறுத்தத்திற்குரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக