ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி பேரணி



ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி பேரணி

ஈழத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அங்கு தமிழினப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் ராஜபக்சவைக் கண்டித்தும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் கறுப்புக் கொடிப் பேரணிகள் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உட்பட மாவட்டத் தலைநகரங்களிலும், அனைத்து நகரங்களிலும் பேரூர், சிற்றூர் என மாநிலம் முழுவதும் நடைபெற்ற இப்பேரணியில் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தும் அதற்கு துணை போகக்கூடாது என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இலங்கையில், சிங்கள அரசு கொலை வெறி போர்ப்படைத் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் விளிம்பில் துடிக்கின்ற நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க ஒற்றுமையுடன் போராடுவோம், வீறுகொண்டு எழுவோம் என்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற கறுப்புக் கொடிப் பேரணியில் பங்கேற்ற பல லட்சம் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

அரசியல், சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈழத் தமிழர்களின் துயர் துடைப்பதில் முன்நிற்போம் என்று பேரணியில் பங்கேற்ற அனைவரும் சூளுரைத்துக் கொண்டனர்.

சென்னையில் தலைவர்கள் பங்கேற்பு

தலைநகர் சென்னையில் இன்று மாலை நடைபெற்ற எழுச்சி மிகு கறுப்புக் கொடி பேரணியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் தொல். திருமாவளவன் , மருத்துவர் இராமதாஸ், தா.பாண்டியன், வைகோ, பழ.நெடுமாறன் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கறுப்புக்கொடிகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர்.

மன்றோ சிலையில் இருந்து புறப்பட்ட இந்த கறுப்புக் கொடிப் பேரணியில் தலைவர்களைத் தொடர்ந்து அணிவகுத்து வந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் முழக்கமிட்டு ஆர்ப்பரித்து சென்றனர்.





அண்ணா சாலை வழியாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகாமையில் இப்பேரணி முடிவுற்றது. அங்கே தலைவர்கள் அனைவரும் உரையாற்றினர்.

இதே போன்று மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் முதலிய மாநகராட்சி நகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும், பேரூர், சிற்றூர்களிலும் கறுப்புக் கொடிப் பேரணிகள் மிகவும் எழுச்சியாக நடைபெற்றன.

இந்த இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள்,பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முதலான அரசியல் கட்சிகள் இடம்பெற்ற போதிலும் இன்றைய பேரணியில் இந்தக் கட்சிகளின் கொடிகள் எடுத்துவரப்படவில்லை. பேரணியில் பங்கேகற்ற அனைவரும் கையில் கறுப்புக்கொடிகளை மட்டுமே ஏந்தி வந்து பங்கேற்றனர்.

இதன் மூலம் இந்த இயக்கம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை அவர்கள் நிரூபித்தனர். இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்த எழுச்சிமிகு கறுப்புக் கொடிப் பேரணி தமிழகத்தில், இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற பேரெழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.




கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் எழுச்சியாக நடந்தது சில இடங்களில் அனுமதி இல்லை என்று காவல் துறை தடுத்தும் அடங்க மறுப்போம் அத்து மீறுவோம் என்று மக்கள் எழுச்சியால் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை சில இடங்களில் கைது நடவடிக்கையும் இருந்தது,,இந்த போராட்டத்தில் இந்திய -சிங்கள அரசை கண்டித்தும்,மாவீரன் முத்து குமரனுக்கும் ரவி குமாருக்கும் வீர வணக்கம் என்ற முழக்கங்கள் விண்ணை தொட்டன ..பிரபாகரன் வாழ்க ! விடுதலை புலிகளின் போராட்டம் வெல்லும் என்றும் முழக்கங்கள் போடப்பட்டன ..சிலர் பிரபாகரனின் படங்களை நெஞ்சில் ஏந்தி வந்ததை உளவு துறை பதிவு செய்து கொண்டனர் ..


எத்தனை ஒடுக்குமுறை வந்தாலும் மக்கள் எழுச்சியை தடுக்க முடியாது என்பது நிருபணமாகி உள்ளது

நன்றி : படங்கள் -www.vck.in & www.puthinam.com

0 comments:

கருத்துரையிடுக