மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது ராணுவ சர்வாதிகாரியா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது ராணுவ சர்வாதிகாரியா?  500, 1000 ரூபாய் செல்லாது என்ற 
அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்



நேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு அறிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு செல்லாமல்போகும் என்ற செய்தியை இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏடிஎம்கள் இரண்டு நாட்களுக்கு இயங்காது, வங்கிகள் மூடப்பட்டன என்ற அடுக்கடுக்கான அறிவிப்பால் நேற்று நள்ளிரவு முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பயணம் செய்யப் போனவர்கள் பேருந்தில் ஏற முடியவில்லை, ஓட்டலுக்குச் சென்றவர்கள் சாப்பிட முடியவில்லை.

ஏழை-எளிய மக்கள் தமது கையிலிருக்கும் ஒன்றிரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் செல்லாமல் போய்விட்டன என்பதையறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்த அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும், கள்ளநோட்டுகளைத் தடுப்பதற்கும் பயன்படும் என மோடி கூறியிருக்கிறார். இது அப்பட்டமான ஏமாற்று என்பதைத் தவிர வேறல்ல. கணக்கில் வராத பணமே கறுப்புப் பணம். அதை வைத்திருப்பவர்கள் காகிதப் பணமாக அதை மூட்டை கட்டி வைத்திருப்பதில்லை. அதுபோலவே இந்தியாவின் 90 விழுக்காடு சொத்து வெறும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது.
 
மோடியின் பிரச்சாரத்துக்குப் பெரும் பணத்தை செலவிட்டு அவரைப் பிரதமரக அமர வைத்திருக்கும் அம்பானியோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடியின் ஆதரவால் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் அதானியோ, மோடிக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட்டுகளோ கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தை காகிதப் பணமாக மூட்டை கட்டி வைத்திருப்பதில்லை. அவர்களது பணம் அயல்நாடுகளில் பாதுகாப்பாக இருக்கிறது. இது மோடிக்கு நன்றாகவே தெரியும்.
 
“நான் பிரதமரானால் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக்கொண்டுவந்து இந்திய குடிமகன் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வேன்” என தேர்தல் நேரத்தில் கொடுத்த ஜம்பமடித்த மோடி, அதைச் செய்யமுடியாத தனது தோல்வியை மறைப்பதற்காக ஆடுகிற கேலிக்கூத்துதான் இது.
 
இந்தியாவில் கறுப்புப் பணத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பது இங்கிருக்கும் தேர்தல் முறைதான். 2014 பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் தமது கட்சியிடமிருந்து பெற்றதாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கணக்கில் உள்ள தொகைக்கும் பாஜக தனது கணக்கில் காட்டியிருக்கும் தொகைக்கும் பலகோடி ரூபாய் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஏடிஆர் இந்தியா என்ற அமைப்பு அம்பலப்படுத்தியது. தேர்தல் செலவை அரசே ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்த முன்வந்தால்தான் கறுப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணை முற்றாக அடைக்கமுடியும்.
 
மோடி அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். “நாட்டுக்காகத் தியாகம் செய்யுங்கள் “வங்கிகளுக்கு வருவோர் கண்காணிக்கப்படுவார்கள்” என்றெல்லாம் அதிகாரிகள் பேசுகின்றனர். இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்ட அதே வார்த்தைகளை இப்போது நாம் மீண்டும் கேட்கிறோம். இது “ பொருளாதார அவசரநிலை” இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் “அரசியல் அவசரநிலை” அறிவிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. மோடியின் இந்த ‘துக்ளக் தர்பாரை’ கண்டுகொள்ளாமல் விட்டால் அடுத்து மிகப்பெரும் ஆபத்து நாட்டுக்கு வந்துசேரும். இந்தியாவிலுள்ள ஜனநாயக சக்திகள் மோடி அரசின் ‘பொருளாதார அவசரநிலையை’ எதிர்த்து முறியடிக்க ஒன்றுதிரளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்.
 
இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக