சுவாதி படுகொலை இராம்குமார் சாவு இரண்டையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் !

சுவாதி படுகொலை இராம்குமார் சாவு 
இரண்டையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் ! 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில்  -தொல்.திருமாவளவன்.

இராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்றக் காவலில் சிறையிலிருந்தவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறுவதை ஏற்கமுடியவில்லை.

இராம்குமார் கைது செய்யப்பட்ட பிறகு அவருடைய வழக்கறிஞர் மற்றும் பெற்றோர் அவரை ஒருமுறைக்கு பலமுறை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அவர்களை சந்தித்த ராம்குமார் தனக்கும் அந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அப்படிப்பட்ட நிலையில் அவருடைய இறப்பு என்பது உண்மையிலேயே தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்கிற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. அவருடைய சாவுக்கு தமிழக அரசுதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். இதை தற்கொலை என்று உடனடியாக மூடிமறைக்க அரசு முயற்சிக்கக் கூடாது. அவருடைய உடலை உடனடியாக அடக்கம் செய்துவிட கூடாது. அவருடைய சாவு தற்கொலைதான் என்பதை உறுதிப்படுத்துகிற வகையில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். 

அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்கிற அய்யத்தை போக்க வேண்டியது, அதை தெளிவுப்படுத்த வேண்டியது, தற்கொலைதான் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. எனவே தமிழக அரசு இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தொடக்கத்திலிருந்தே காவல்துறையினர் ராம்குமாரை அணுகியமுறையும் கைதுசெய்த முறையும் அவரை நடத்திய முறையும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ஆகவே அவருடைய இறப்பில் சந்தேகமிருக்கிறது. அது உரிய விசாரணைக்கு பிறகு தான் உறுதி செய்யப்பட வேண்டும்.

சுவாதி கொலையிலேயே ராம்குமாருக்கு எந்த அளவுக்கு தொடர்பிருக்கிறது என்பது இன்னும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இப்போது ராம்குமாருடைய சாவு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. எனவே, சுவாதியின் படுகொலை, இராம்குமார் சாவு ஆகிய இரண்டையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

இவண்
தொல்.திருமாவளவன்.

0 comments:

கருத்துரையிடுக