புழல் சிறையில் ராம்குமார் மர்ம மரணம் : சிறைத்துறை- காவல்துறை - கிரிமினல்கள் கூட்டணி

புழல் சிறையில் ராம்குமார் மர்ம மரணம் : சிறைத்துறை- காவல்துறை - கிரிமினல்கள் கூட்டணி
உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் 
விசாரணைக் குழு அமைத்திடுக!
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
 

சுவாதி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர் மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டார் என சிறை அதிகாரிகள் சொல்வது நம்பும்படியாக இல்லை. எனவே ராம்குமாரின் மரணம் குறித்து விசாரிக்க தற்போது பணியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணக் குழு ஒன்றை அமைத்திடவேண்டும் என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ராம்குமார் கைதுசெய்யப்பட்டபோது அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாரென காவல் துறையினர் கூறினார்கள். ஆனால் அதை ராம்குமாரும், ராம்குமாரின் தந்தையும், அவரது வழக்கறிஞரும் மறுத்ததோடு போலீஸார்தான் தனது கழுத்தை அறுத்துக் கொலைசெய்ய முயற்சித்தார்கள் என்று ராம்குமார் தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். கழுத்தை அறுத்த மர்மமே விலகாத நிலையில் மிகுந்த பாதுகாப்பு கொண்ட நவீன முறையில் கட்டப்பட்ட புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக சிறை அதிகாரிகள் கூறுவது எவராலும் நம்பமுடியாத கதையாக இருக்கிறது.

ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது உண்மையாக இருந்தால் அவரது வழக்கறிஞர் தொலைபேசியில் கேட்டபோது ராம்குமார் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாததால் வாந்தியெடுத்தாரெனவும் அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாரெனவும் ஒரு தவறான தகவலை ஏன் சிறை நிர்வாகம் கூறவேண்டும்? இன்னும் ஒருசில நாட்களில் ராம்குமாரின் பிணைக்கான மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இப்படித் திடீரென அவர் இறந்திருப்பது பலத்த சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

” சிறைச்சாலையில் நடக்கும் எந்தவொரு தவறுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்; தணடனைக் கைதியோ விசாரணைக் கைதியோ உயிர் வாழ்வதற்கான அவரது அடிப்படை உரிமையைப் பாதுகாக்கவேண்டியது சிறை அதிகாரிகளின் பொறுப்பு “ என நீலாவதி பெஹரா எதிர் ஒரிசா மாநில அரசு ( 1993) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ” சட்டத்தின் நோக்கம் பொது அதிகாரத்தை சீர்திருத்துவது மட்டும் அல்ல, தமது நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கிற சட்ட அமைப்பின்கீழ் தாங்கள் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதுதான்” எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புழல் சிறை அதிகாரிகள் மதிக்கவில்லை, தமிழக அரசாங்கமும் சிறையில் இருப்போரின் நலன் குறித்து கவலைப்படவில்லை.அதைத்தான் ராம்குமாரின் மர்ம மரணம் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.  

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கடந்த ஒருசில ஆண்டுகளாகவே ஏராளமான மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறை நிர்வாகம் தாக்கல்செய்த பதில் மனுவில் 2000 க்கும் 2013 ஆம் ஆண்டுக்கும் இடையே 1155 பேர் தமிழக சிறைகளில் மரணம் அடைந்துள்ளனர் எனக் கூறியது. அதாவது நான்கு நாட்களுக்கு ஒருவர் தமிழக சிறைகளில் மரணம் அடைகிறார். இது இந்திய அளவில் மிகவும் அதிகம்.

சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் பெருகிவரும் குற்றங்களுக்கு காவல்துறை,சிறைத் துறை,கிரிமினல்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையே எற்பட்டுள்ள கூட்டணியே முதன்மையான காரணமாகும். அண்மையில் சிறைக்குள் பேரறிவாளன் தாக்கப்பட்டிருப்பது இதற்கொரு சான்று.

ராம்குமார் மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படும் விசாரணைக் குழு காவல்துறை,சிறைத் துறை,கிரிமினல்களின் கூட்டணி குறித்தும் விசாரிக்கவேண்டும். அதற்கேற்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக