காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி

ரயில் மறியல் போராட்டம்

தொல்.திருமாவளவன் அறிவிப்பு



காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குரிய, காவிரி நீரைத் தருவதற்கு கர்னாடகம் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவின்படி மிகக் குறைந்த அளவு தண்ணீரைத்தான் அது திறந்துவிட்டுள்ளது. ஆனால் அதை முகாந்திரமாக வைத்துக்கொண்டு கர்னாடகாவில் இருக்கும் இனவெறி உதிரிக்குழுக்கள் கர்னாடகாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான மிகப்பெரிய வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளனன. தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.


காவிரி பிரச்சனை என்பது கர்னாடகம் தமிழ்நாடு என்ற இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை என்பது மாறி இரண்டு மாநில மக்களுக்கு இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளதற்கு தொடர்ந்து இப்பிரச்சனையில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியமே காரணம். இதில் காங்கிரஸ் அரசு பின்பற்றிய அதே வழியைத்தான் இன்றைய பாஜக அரசும் பின்பற்றிவருகிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைக்காமல் காலம் கடத்திவருகிறது. கர்னாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இருப்பதாலும் தமிழ்நாட்டில் அத்தகைய வாய்ப்பு அந்தக் கட்சிகளுக்கு இல்லை என்பதாலும் வாக்குவங்கி நலனை மனதில்கொண்டு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே தமது கொள்கையாக அக்கட்சிகள் வைத்துள்ளன.


கர்னாடகாவில் நடந்துவரும் இனவெறித் தாக்குதல்கள் தமிழ்நாட்டிலும் அத்தகைய சக்திகளை உசுப்பேற்றிவருகின்றன. இந்த நிலையிலும்கூட இந்தியப் பிரதமர் இந்தப் பிரச்சனையைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவது வேதனை அளிக்கிறது.


* உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடைப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்;

*பிரதமர் இப் பிரச்சனையில் தலையிட்டு தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைத்திட வகைசெய்ய்யவேண்டும்;

* கர்னாடகாவில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்
 - என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் நாள் வெள்ளியன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும், சென்னையில் அப்போராட்டத்தில் நான் தலைமையேற்கவுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக