மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகளின் முற்போக்கு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி
விடுதலைச்சிறுத்தைகளின் முற்போக்கு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

தொல்.திருமாவளவன் அறிக்கை



    பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதே வாடிக்கையாகிவிட்டது.  ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையான ஒரே மொழி, ஒரே பண்பாடு என்னும் நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நரேந்திரமோடி அரசின் நோக்கமாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில்தான் மக்களுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி அதன் மூலம் அனைவரும் சமற்கிருதம் கற்க வேண்டும் என்பதை தேசியக் கல்விக்கொள்கையாக நடைமுறைப்படுத்தும் எண்ணத்தில், அதனை வெள்ளோட்டம் பார்ப்பதற்காகவே மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.  அக்கல்விக் கொள்கையில் குழந்தைகளின் வேலைவாய்ப்புத் திறனை வளர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் பள்ளி முடிந்தவுடன் குடும்பத் தொழிலைக் கட்டாயப்படுத்தி கற்கவைத்து அதன்மூலம் குலக்கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. 


பள்ளிப் பருவத்திலேயே கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கத்தை மாணவர்களிடையே திணிப்பதற்கான குறுக்குவழியே புதிய கல்விக் கொள்கையாகும். மேலும், மாணவ, மாணவிகள் இருபாலாரும் இணைந்து கற்கும் வகுப்பறைகள் (Co-education)  கூடாதெனவும் வலியுறுத்துகிறது.   அத்துடன், பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் முதலாளிகளும் கல்வித் துறையில் முதலீடு செய்து கொள்ளை இலாபம் அடிப்பதற்காகவும் வழிவகை செய்கிறது.   மேலும், மாநில அரசின் அதிகாரம் என்னவென்பதும் தெளிவாக்கப்படவில்லை.  இன்னும் அதில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதால் தேசியக் கல்விக் கொள்கையின் உருவாக்கம் மக்கள் விரோத கல்விக் கொள்கையாகவே இருக்கிறது. 


ஆகவே, மாநில உரிமைகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் எதிராகத் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் மைய அரசின் முயற்சியை சனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டுமென்று விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.  மைய அரசு அக்கல்விக் கொள்கையைக் கைவிடக்கோரி வரும் ஆகஸ்ட் 3ஆம் நாள் புதன்கிழமை சென்னையில் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதுடன், வரும் ஆகஸ்ட் 8 அன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி திராவிடர் கழகம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திலும் விடுதலைச்சிறுத்தைகள் பெருந்திரளாகப் பங்கேற்கும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக