சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி ஜீலை 2ஆம் நாள் ஆர்ப்பாட்டம்
சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த
தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி
சென்னையில் சூலை 2ஆம் நாள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் அறிவிப்பு
அதிமுக அரசு மீண்டும் பதவி ஏற்றதிலிருந்து தமிழ்நாடெங்கும்
கொடுங்குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பாதுகாப்பாக வெளியில்
நடமாட முடியாது என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆணவக் கொலைகள்,
ஆதாயத்துக்காக நடைபெறும் கொலைகள், அதிலும் பெண்களைக் குறிவைத்து
நடத்தப்படும் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
சென்னையில்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கொலை செய்யப்பட்டதும், ரயில்
நிலையத்தில் அனைவரின் கண் முன்னே சுவாதி என்கிற இளம்பெண் படுகொலை
செய்யப்பட்டதும் இந்த வன்முறைகளின் உச்சமாக உள்ளன. இந்தக் குற்றங்களை
கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கூலிப் படையினரின்
கொட்டத்தை அடக்க வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளெல்லாம்
வலியுறுத்தி வருகின்றன. ஆனால், காவல்துறையோ ரவுடிகளைக் கைது செய்கிறோம்
என்கிற பெயரில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளை கைது செய்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள்
பல்வேறு மாவட்டங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களெல்லாம் ரவுடிகள்
பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை காரணம் கூறுகிறது. கூலிக்குக்
கொலை செய்பவர்கள் ரவுடிகளா? கொள்கைக்காகப் போராடுகிறவர்கள் ரவுடிகளா?
என்பதை காவல்துறையினர்தான் விளக்க வேண்டும்.
ஒசூரில் வழிப்பறித்
திருடர்களால் கொலை செய்யப்பட்ட காவல்துறையைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு
ரூ. 1 கோடி நிதி வழங்கி தமிழக முதல்வர் அறிவிப்புச் செய்தார்.
காவல்துறையினரின் மனஉறுதி குலைந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவர்களது
நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காகவும் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை
விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
ஆனால் தொடர்ந்து நடந்துவரும்
கூலிப்படைகளால் நடத்தப்பட்டுவரும் கொலைகளால் தமிழக மக்களின் நம்பிக்கை
தகர்ந்துபோய் உள்ளது. அவர்களது மனஉறுதி குலைந்துபோய் உள்ளது. அதைச்
சீர்செய்ய தமிழக முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைத்
தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
தமிழ்நாட்டின்
வளர்ச்சிக்கு இங்கே அமைதி நிலவ வேண்டியது அடிப்படைத் தேவையாகும். சமூக
விரோதிகள் கட்டுப்படுத்தப்படாமல் பொது அமைதியைப் பாதுகாக்க முடியாது.
எனவே, சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை
வற்புறுத்தி எதிர்வரும் சூலை 2ஆம் நாள் சனிக்கிழமை சென்னையில் எனது
(தொல்.திருமாவளவன்) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக