மகுடம் சூடுமா மக்கள் நலக் கூட்டணி?

மாற்று அரசியலை முன்வைக்கும் கூட்டணி குறித்து ஓர் அலசல்
பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவே இன்றும் தேர்தல் களத்தில் முழுமையாக
இறங்காத நிலையில், முழுமூச்சில் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது மக்கள்
நலக் கூட்டணி.
மதிமுக தலைவர் வைகோ தலைமையிலான இக்கூட்டணியில் பங்கேற்றிருக்கும் இந்திய
கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய
கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரத்தில் உற்சாகம்
மிளிர்கிறது. சமீபத்தில் மதுரையில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில்
திரண்ட கூட்டமும், மாநாட்டில் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் மக்கள்
கவனத்தை மக்கள் நலக் கூட்டணியின் மீது திருப்பியிருக்கின்றன என்றுதான்
சொல்ல வேண்டும். ஆனால், தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளான திமுக,
அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியால் உருக்கொள்ள முடியுமா?
கருத்துக் கணிப்பு
பேரா.ராஜநாயகத்தின் ‘மக்கள் ஆய்வகம்’ கடந்த மாதம் வெளியிட்ட கருத்துக்
கணிப்பில், ‘இன்றைய தேதிக்குத் தேர்தல் வந்தால், யாரை முதல்வராகத்
தேர்ந்தெடுப்பீர்கள்’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட
பதில்களில் முதல் ஐந்து இடங்களில் மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த எந்தத்
தலைவரும் இடம்பெறவில்லை. அதேபோல், இக்கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு
தெரிவித்திருந்தவர்கள் 5.4%தான். கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மழை
வெள்ளத்தின்போது தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் எழுந்த
நிலையில், திமுகவுக்கான ஆதரவு கணிசமான அளவில் பெருகியிருந்தது. எனவே,
வழக்கம்போல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் பிரதான போட்டி
ஏற்படும் என்றும், அக்கட்சிகள் ஏற்படுத்தும் கூட்டணிகளின் அடிப்படையில்
தேர்தல் நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் பேச்சு எழத் தொடங்கியது.
இந்நிலையில்தான், மதுரையில் மக்கள் நலக் கூட்டணியின் மாநாடு வெற்றிகரமாக
நிகழ்ந்தேறியது. மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற தாகவும்,
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்றன என்றும் குறிப்பிட்ட
வைகோ, மக்கள் நலக் கூட்டணியை ஓர் அரசியல் சக்தியாக அங்கீகரிப்பதற்கு அந்த
மாநாடு உதவியதாகப் பெருமிதப்பட்டார். எனினும், அரசியல் களத்தில் பலம்பெற
இன்னும் சில கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பதையும் மக்கள் நலக் கூட்டணி
உணர்ந்திருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக தவிர வேறு எந்தக்
கட்சியுடனும் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாகவே மக்கள் நலக் கூட்டணித்
தலைவர்கள் கூறிவந்தார்கள். தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கும், தமாகா தலைவர்
ஜி.கே. வாசனுக்கும் தொடர்ந்து அழைப்புகளும் விடுத்துவந்தனர். எனினும்,
ஒருகட்டத்துக்கு மேல் பொறுப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்ததால்,
விஜய்காந்தோ, வாசனோ வந்தால் நல்லது; ஆனால், அவர்களுக்காகக்
காத்திருக்கப்போவதில்லை என்ற முடிவை இக்கூட்டணி எடுத்துவிட்டது.
கூட்டணி பலமா?
புதுச்சேரி பிரச்சாரக் கூட்டத்தில், மேடையில் அமர்ந் திருக்கும்
தலைவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, தோள் துண்டைச் சரிசெய்துகொண்டு,
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் …” என்று வைகோ பேசத் தொடங்குகிறார்.
“கனவுகள் ஒரு நாள் நனவாகும், அறிவாசான் பெரியார் பிறந்த மண்ணில் அது
நனவாகும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை
முன்னிறுத்தி அவர் பேசும்போது கைத்தட்டல் பறக்கிறது. மதுரை மாநாட்டில்,
“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியில் வா” என்று
திருமாவளவனைக் குறிப்பிட்டு அவர் பேசியபோதும் உற்சாகக் குரல்கள் அதை
வரவேற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசியத் தலைவர்களே ஆச்சரியப்படும்
வகையில் மதுரை மாநாட்டுக்கும், புதுச்சேரி பிரச்சாரக் கூட்டத்துக்கும்
வரவேற்பு கிடைத்தது.
கடந்த ஆண்டு மதுவுக்கு எதிராகத் தமிழகத்தில் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள்
தொடங்கிய சூழலில், மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் மதிமுக,
மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்,
காந்திய மக்கள் இயக்கம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து செயலாற்றத்
தொடங்கின. மூன்றாவது அணியாக உருக்கொள்வதற்கு முன்பே காந்திய மக்கள்
இயக்கம், மனித நேய மக்கள் கட்சி இரண்டும் வெளியேறின. அதேபோல், விடுதலைச்
சிறுத்தைகளும் அந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் என்று தகவல்கள்
பரவின. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறவில்லை. மாறாக, இன்றைக்கு,
“தமிழகத்துக்கு ஒரு தலித் முதல்வர்” என்ற கோரிக்கையை முன்னெடுக்கும்
அளவுக்குச் சக்திவாய்ந்த கூட்டாளியாக அக்கூட்டணியில் உருவெடுத்திருக்கிறது.
கொள்கை முரண்பாடுகள்
கருணாநிதி, ஜெயலலிதா என்று இரு பெரிய தலைவர்களின் பெயர்கள் எதிர் அணிகளில்
மையமாக வெளிச்சமிடும் சூழலில், மக்கள் நலக் கூட்டணியின் ‘முதல்வர்
வேட்பாளர்’ யார் என்பதே அது எதிர்கொண்ட முதல் சவால். கூட்டணிக்கு
வெளியிலிருந்தே, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை
முதல்வர் வேட்பாளராக முன்வைக்கலாமே” என்று குரல்கள் எழுந்தன. எனினும்,
“நாடாளுமன்ற அடிப்படையிலான தேர்தல் ஜனநாயகத்தில் முதல்வர் வேட்பாளரை
முன்னிறுத்துவது சரியல்ல” என்றே மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள்
பதிலளித்தனர். “தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே நாங்கள் முதல்வர்
பதவிக்கானவரை முன்மொழிவோம்” என்று மக்கள் நலக் கூட்டணி அறிவித்திருப்பது
எத்தகைய முடிவுகளைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேபோல், இக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் தாங்கள்
கொண்டிருக்கும் சில கொள்கை களில் சமரசம் செய்துகொண்டிருப்பதும் அரசியல்
பார்வையாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணத்துக்கு, இலங்கைத்
தமிழர்கள் விவகாரத்தில் மதிமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்
(குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி) இடையில் முற்றிலும் வெவ்வேறான
நிலைப்பாடுகள் உண்டு. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் இப்போது முற்றிலுமாகத்
தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அக்கூட்டணி அறிவித்த குறைந்தபட்ச
செயல்திட்டத்தில் ஈழப் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை போன்ற பிரச்சினைகள்
தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
காத்திருக்கும் சவால்கள்
மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் நான்கு கட்சிகளும், இதற்கு முன்
வெவ்வேறு தருணங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவைதான்.
அக்கட்சிகளுக்கு மாற்றாகக் களமிறங்கியிருக்கும் சூழலில், இக்கூட்டணியில்
அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கென்று தனித்தனியாக இருக்கும் ஓட்டு வங்கிகளின்
சதவீதம் மட்டும் வெற்றிக்குக் கைகொடுக்காது என்பது தெரிந்த விஷயம்தான்.
தவிர, கூட்டணித் தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் கேள்விக்குரிய
விஷயம்தான். எனினும், எங்களில் ஒருவர் மீதேனும் ஊழல் குற்றச்சாட்டுகள்
உண்டா என்று வைகோ முதல் திருமாவளவன் வரை கேட்பது மக்களிடம் எடுபடுகிறது.
இன்னும் கடைசிக் கிராமம் வரை அமைப்பு ரீதியான கட்டமைப்பின்மை, பண பலம்
இல்லாதது, ஊடக பலமின்மை என்று பல காரணிகளில் ம.ந.கூ. கீழே இருந்தாலும்,
மக்கள் இக்கூட்டணியைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே முக்கியச்
செய்தி.
கூட்டணி நிலைக்குமா?
ஊழல், முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் திமுக, அதிமுகவை
நிழலாகத் தொடரும் நிலையில், மாற்று அரசியல் எனும் முழக்கத்தை இக்கூட்டணி
முன்னிறுத்துவது கவனம் பெற்றிருக்கிறது.
1967-லிருந்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புகளில் இருந்துவரும் இரு பெரும்
கட்சிகளின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்திருக்கும் மக்களில் ஒரு
பகுதியினர் இக்கூட்டணியை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும்
மறுப்பதற்கில்லை. இன்றைய தேதியில், மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல்
கொடுப்பதிலிருந்து, தங்கள் அளவில் தெளிவான செயல் திட்டங்களை அறிவிப்பது
வரை, தேர்தல் பயணத்தில் முன்கூட்டி முன்னேறும் இக்கூட்டணி, இத்தேர்தலில்
அடையும் எந்த வெற்றியும் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும்
என்பது மட்டும் நிச்சயம்.
- வெ. சந்திரமோகன்
0 comments:
கருத்துரையிடுக