அனைத்து சாதியினரும், பெண்களும் அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்!


திராவிடர் கழகம் நடத்தும் போராட்டத்தில் 
விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும்!
தொல்.திருமாவளவன் அறிவிப்பு

தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுவிட்டாலும் ஆலயங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அர்ச்சகராக இருக்க முடியும் எனச் சொல்லி தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கடைபிடிக்கப்பட்டுவரும் தீண்டாமையை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு வழி செய்து கடந்த தி.மு.க ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது. அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அர்ச்சகருக்கான பயிற்சியும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் சென்று சிலர் தடை ஆணை பெற்றதால், முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்ற 207 பேர் இப்போது வேலையின்றித் தவிக்கின்றனர். தமிழக அரசின் சட்டத்தின் மீதான தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர்களுக்காக பிரபல வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனாவும், காலின் கான்ஸலஸும் வாதாடி வருகின்றனர். ஆனால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட அந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உச்சநீதிமன்றம் கருதாதது வேதனை அளிக்கிறது. அந்த வழக்கை விரைந்து முடித்து சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசும் முனைப்புக் காட்டவில்லை. 

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் பெண்களும் அர்ச்சகராக இருக்கலாமென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். அந்தத் தீர்ப்பு இப்போதும் நடைமுறையில்தான் இருக்கிறது. எனவே, அனைத்துச் சாதியினர் மட்டுமின்றி பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற கோரிக்கையையும் விடுதலைச் சிறுத்தைகள் சேர்த்து முன்மொழிகிறது.

அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் பேரணி நடத்தக்கூடாது என முற்போக்காக தீர்ப்பு வழங்கும் உச்சநீதிமன்றம் இன்னும் ஆலயங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை எவ்வாறு அனுமதிக்கிறது என்பது புரியவில்லை. இது வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனை அல்ல. சமத்துவம், சமூக நீதி குறித்த பிரச்சனையாகும். இதற்காக திராவிடர் கழகம் அறிவித்துள்ள போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முழுமையாக ஆதரிக்கிறது. தமிழகமெங்கும் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். 

0 comments:

கருத்துரையிடுக