சமூக நீதிக் கொள்கைக்கு ஆபத்து! – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எழுச்சித்தமிழர் வலியுறுத்தல்
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (கிமிசிஜிணி) ஆணை பிறப்பித்திருந்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கில் நேற்று தமிழக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பிறப்பித்த ஆணை சரிதான் என்றும், குறைந்தபட்ச மதிப்பெண் 40 விழுக்காடு இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 35 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 45 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் 2011ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசு ஆணை பிறப்பித்தது. இதனால் கிராமப் புறத்தைச் சேர்ந்த ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் அந்த மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமென்பதில் நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், பொறியியல் கல்லூரியில் சேர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும், தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மாணவர்களும் ஒரே மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு தமிழக அரசு கொண்டு சென்றதாகவும் தெரியவில்லை. எனவே, சமூக நீதிக்கு எதிரான இந்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் ஆயிரக் கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. ஆனாலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை நிரப்புவதில் குளறுபடிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டின் நிலை குறித்து, கேட்பாரற்ற சூழல் உள்ளது. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் தகுதி மதிப்பெண் அளவை உயர்த்துவது என்பது தலித் விரோத நிலைப்பாடே ஆகும் என்பதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கும் தமிழக அரசுக்கும் சுட்டிக்காட்டுகிறோம். இந்த பாரபட்சத்தைக் களைவதற்கு உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக