உதயன் நாளிதழ் அலுவலகத்தின் மீது தாக்குதல் ஐ.நா. பேரவை தலையிட தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலைக்கவசம் அணிந்து துப்பாக்கிகளோடு அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தியும் அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியும் விரட்டியடித்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த அச்சு இயந்திரங்கள் மற்றும் பத்திரிகை அச்சிடுவதற்குரிய காகிதங்கள் போன்றவற்றை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அந்த நாளேடு செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் ஊடகத்தினர் மீது தொடுக்கப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. அரசாங்கத்தின் ஆதரவோடும் இராணுவத்தின் தூண்டுதலோடும் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் ஊடகச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா. பேரவை உடனடியாக இதில் தலையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
இலங்கையிலுள்ள இராஜபக்சே அரசை விமர்சிக்கிற ஊடகங்களின் மீது தொடர்ந்து இவ்வாறு கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, இலங்கையைச் சேர்ந்த 23 ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும்கூடத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலகிலேயே ஊடக சுதந்திரம் மிக மோசமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. கடந்த மாதத்தில் ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்கூட அங்கு நடைபெற்றுவரும் வன்செயல்களைக் கட்டுப்படுத்த உதவவில்லை. அந்தத் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லையென்றும், ஐ.நா. கூறியபடி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க முடியாது என்றும் இராஜபக்சே அரசு திமிர்த்தனமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை ஐ.நா. பேரவைக்கு உள்ளது.
அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளங்களும்கூட இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. இதுவரை, 5 இணையதளங்கள் மூடப்பட்டுள்ளன. 2 இணைய தள அலுவலகங்களில் இராணுவத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. புகழ்பெற்ற பிபிசி வானொலியும்கூட இலங்கை அரசால் அச்சுறுத்தப்பட்டு சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போதான இனப்படுகொலை வெளிஉலகுக்குத் தெரியாதவண்ணம் எப்படி ஊடகங்களை இலங்கை அரசு கட்டுப்படுத்தியதோ, அதுபோலவே இப்போதும் செய்துகொண்டுள்ளது. இது இலங்கையில் வாழும் அனைத்துத் தரப்பினருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இலங்கையைக் கண்டிக்க வேறு எந்த நாடும் முன்வராத நிலையில் ஐ.நா. பேரவை தலையிடுவதைத் தவிர வேறுவழியில்லை. அங்கு மிச்சம் மீதி இருப்பவர்களும் கொன்றொழிக்கப்பட்ட நிறகு தீர்மானம் நிறைவேற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக ஐ.நா. பேரவை தலையிட்டு இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக ஐ.நா. பேரவைச் செயலாளருக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கும் கடிதங்கள் எழுதப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல். திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக