ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் சென்னையில் மாபெரும் மக்கள் ஒற்றுமைப் பேரணி -


ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள்
சென்னையில் மாபெரும் மக்கள் ஒற்றுமைப் பேரணி -
விருதுகள் வழங்கும் விழாப் பொதுக்கூட்டம்
விருது பெறும் சான்றோர் பட்டியல் அறிவிப்பு

தொல்.திருமாவளவன் அறிக்கை
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை மற்றும் மொழி, இன பாதுகாப்பு போன்ற தளங்களில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.  புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பண்டிதர் அயோத்திதாசர், பெருந்தலைவர் காமராசர், கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் ஆகிய மாமனிதர்களின் நினைவாகவும், தமிழ்மொழி செம்மொழி தகுதி பெற்றதை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் ஆறு விருதுகள்  ஏப்ரல் 14, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் அளிக்கப்பட்டு வருகின்றன.  விருதுபெறும் சான்றோருக்கு  நினைவுக் கேடயம், பாராட்டுப் பட்டயம் ஆகியவற்றுடன் தலா ரூபாய் 50,000 பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2013ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா ஏப்ரல் 14 அன்று சென்னையில் நடைபெறுகிறது.  இவ்விழாவில் அம்பேத்கர் சுடர் விருது புதுதில்லியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருது திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் டி.ஞானையா அவர்களுக்கும், காமராசர் கதிர் விருது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நிலக்கோட்டை ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களுக்கும், காயிதே மில்லத் பிறை விருது தமிழக தெற்கு எல்லைப் போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களுக்கும், செம்மொழி ஞாயிறு விருது சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

இவ்விழாவுடன் இந்த ஆண்டு தமிழக மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மாபெரும் மக்கள் ஒற்றுமைப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து நாடு முழுவதும் சாதிவெறி உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் வெளிப்படையாகவே ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது.  ஈழத் தமிழர் நலன்களுக்காக மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தத் தமிழகமும் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையிலும் அக்கும்பல் மட்டும் தமிழினத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சாதிவெறிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் சாதி உணர்வுகளுக்கு ஆட்படாதவாறு தமிழ் மக்களின் ஒற்றுமையை வென்றெடுக்க வேண்டியுள்ளது.

அதாவது, ஈழத் தமிழர்களின் நலன்களுக்காகவும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காகவும் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.  ஈழத் தமிழர்ச் சிக்கல், காவிரி நீர் மற்றும் முல்லை பெரியாறு அணைச் சிக்கல்கள், கச்சத் தீவு மீட்பு, தமிழக மீனவர்கள் பாதுகாப்பு போன்றவற்றில் இந்திய அரசின் போக்கு தமிழ்ச் சமூகத்திற்கு எதிராகவே இருந்து வருகிறது.  ஆகவே, இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக மக்கள் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட வேண்டும் என்பதையும், தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாத்திட யாவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்பதையும் உணர்த்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மாபெரும் மக்கள் ஒற்றுமைப் பேரணி நடத்தப்படுகிறது.  பிற்பகல் 3 மணியிலிருந்து 5 மணி வரை பேரணியும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு விருதுகள் வழங்கும் விழாப் பொதுகூட்டமும் நடைபெறவுள்ளது.  இப்பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி மக்கள் ஒற்றுமையை விரும்பும் சனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.
 
இவண்

தொல்.திருமாவளவன்

1 comments:

யார் நினைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சியையும் ,வளர்ச்சியையும் தடுக்க முடியாது

13 ஏப்ரல், 2013 அன்று PM 1:12 comment-delete

கருத்துரையிடுக