சாதிப் பஞ்சாயத்துகள் சட்டவிரோதமானவை! நீதிபதி வர்மா ஆணையம் அறிவிப்பு - தொல்.திருமாவளவன் வரவேற்பு


டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறது.  ஒரே மாதத்தில் தனது பணியை நிறைவேற்றியுள்ள வர்மா ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் பாராட்டுகிறது.  அதன் பரிந்துரைகளை ஆய்வு செய்து மைய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது.

வர்மா ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளில் முக்கியமானது, சாதிப் பஞ்சாயத்து மற்றும் கவுரக் கொலைகள் தொடர்பான பரிந்துரையாகும்.  இந்தப் பிரச்சனைக்கென தமது அறிக்கையில் ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கும் வர்மா ஆணையம், சாதிப் பஞ்சாயத்துகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவித்துள்ளது.  அவற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறது. சாதி கவுரவம் என்ற பெயரில் நடத்தப்படும் படுகொலைகளைக் கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் ஒன்றை மைய அரசு உருவாக்க வேண்டும் என அது வலியுறுத்துகிறது. 

 கவுரவக் கொலைகள் நடைபெற்றால் அதற்கு அந்த மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் பொறுப்பேற்க வேண்டும்.  கவுரவக் கொலைகளைத் தடுக்கத் தவறிய அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் கூறியிருப்பதை வர்மா ஆணையம் வழிமொழிந்துள்ளது.  பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை தேவையில்லை, ஆயுள் தண்டனையே போதும் என்று கூறியுள்ள வர்மா ஆணையம், கவுரவக் கொலைகள் அரிதினும் அரிதான குற்றங்களாகக் கருதப்பட்டு அவற்றுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை வலியுறுத்தியுள்ளது.

வடஇந்தியாவில் இருப்பதைப் போன்று சாதிப் பஞ்சாயத்துகள் தமிழகத்தில் இல்லையென்றாலும் கலப்பு மணங்களை எதிர்ப்பது, கவுரவக் கொலைகளைத் தூண்டுவது என்ற வகையில் அண்மைக் காலமாக செயல்பட்டுவரும் சாதிய அமைப்புகளை சாதிப் பஞ்சாயத்துகளாகவே கருத வேண்டும்.  வர்மா ஆணையம் இது தொடர்பாக வழங்கியுள்ள பரிந்துரைகள் இந்த அமைப்புகளுக்கும் பொருந்தும்.  எனவே கவுரவக் கொலைகளை விசாரித்து தண்டனை வழங்க சிறப்புச் சட்டம் ஒன்றை உடனடியாக இயற்றுவதற்கு 
மைய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.  தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதிவெறியைத் தூண்டி சமூக அமைதியைக் கெடுக்கும் அமைப்புகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக