"வில்லன்களை சினிமாவில் ரசிக்கலாம். அரசியலில் அல்ல!" - ஜீ.வி நேர்காணல்


"வில்லன்களை சினிமாவில் ரசிக்கலாம். அரசியலில் அல்ல!"

ராமதாஸை உலுக்கும் திருமா
பாரதி தம்பி
படம் : கே.ராஜசேகரன்
..............................................................................................................................................................................................................
"வன்முறை வார்த்தைகள் மூலம் கலவரத்தைத் தூண்டிவிட ஒரு ஆள் போதும். மக்களைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தவே ஒரு தலைவன் வேண்டும். விடு தலைச் சிறுத்தைகள்   ஒருபோதும் வன்முறை யைத் தூண்டாது. ஆனால், தலித் மக்களை இந்த அரசு கைவிட்டுவிட்ட நிலையில், போலீஸ் கைவிட்டுவிட்ட நிலையில், இனி மேல் தலித்துகள் தங்களின் பாதுகாப்பைத் தாங்கள்தான் உறுதி செய்துகொள்ள வேண்டும். முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தி.மு.க-வினரால், அ.தி.மு.க-வினர் தாக்கப்பட்டபோது, 'தொண்டர்கள் தங்கள் பாதுகாப்புக்காகக் கத்தி வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர். அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன்.'' - வியர்வை வழிய வழியப் பேசிவிட்டு இறங்குகிறார் தொல்.திருமாவளவன். தருமபுரி வன்முறை விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி சென்னையில் நடந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில், திருமாவின் பழைய சீற்றத்தைப் பார்க்க முடிந்தது.

 ''தருமபுரி வன்முறையில் தலித் மக்கள் இரண்டு தலைமுறைகளாகச் சேர்த்த மொத்த சொத்துகளும் திட்டமிட்டு நாசமாக்கப்பட்டு இருக்கின்றன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை. ஒரு சில தலித்துகள் சம்பவ இடத்தில் இருந்தும்கூட, அவர்களை அடிக்கவோ, காயப்படுத்தவோ முயற்சிக்காமல் சொத்து களை அழிப்பதிலும் கொள்ளை அடிப்பதி லுமே குறியாக இருந்திருக்கிறார்கள். தலித்து கள் பொருளாதாரரீதியாகத் தலைநிமிர்ந்து விடக் கூடாது என்ற தெளிவான நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அதனால், இதை உணர்ச்சிவசப்பட்டவர்களின் கோபம் என்று சுருக்க முடியாது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இருக்கும் மக்கள் இந்த மோசமான தாக்கு தலில் இருந்து மீண்டுவர இன்னும் இரண்டு தலைமுறைகள் ஆகும்!''  

''இந்தப் பிரச்னையில் டாக்டர் ராமதாஸ் மீது நீங்கள் வைக்கும் விமர்சனம் என்ன?''

''அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி. ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் தம் தொண்டர்களுக்கு மனிதநேயத்தையும் பிற சமூகத்தினரை நேசிக்கவும் கற்றுத் தருவதன் மூலம் இப்படிப்பட்ட வன்முறைகள் வராமல் தடுக்க முடியும். ஆனால், இந்த தருமபுரி வன்முறையைப் பொறுத்தவரையில் பா.ம.க-வின் பொறுப்பாளர்களும் வன்னியர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் நேரடியாகத் தலைமை ஏற்று, எல்லோரையும் ஒருங்கிணைத்து நடத்தி இருக்கிறார்கள். இது ஊர் அறிந்த, உலகு அறிந்த உண்மை. ஆகவே, ராமதாஸ் தலையிட்டு இருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும். நான்கூட அவருக்கே தெரியாமல் இது நடந்திருக்குமோ என்று நினைத்தேன். அதனால்தான், 'மருத்துவர் இதில் தலையிட்டு சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவரோ, நான்தான் தூண்டிவிட்டேன் என்பதுபோல பேசிவருவது வேதனை அளிக்கிறது.''

''சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்த்து வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தொடர்ந்துப் பேசிவருவதுதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறதே?''


''பேச்சோடு நின்றிருந்தால்கூட இவ்வளவு பெரிய வன்முறை நடந்திருக்காது. திட்டமிட்டு இந்த வன்கொடுமைகளை அரங்கேற்றி இருக் கிறார்கள். சாதி சங்கங்கள் தம்முடைய சுயநலன்களை மட்டுமே முன்னிறுத்தி, சாதியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அப்பாவி மக்களை மோதவிடும் இந்தப் போக்கு ஆபத்தானது. ஆனால், இந்த வன்முறையை நடத்துபவர்களை விட, அதை மௌனமாக வேடிக்கை பார்க்கும் ஆட்சியாளர்கள் இன்னும் ஆபத்தானவர்கள்!''

''தலித் ஆண்கள், ஆதிக்க சாதிப் பெண்களைத் திட்டமிட்டுக் காதலித்து,பணம் பறிக்கிறார்கள் என்று ஒருசாரார் குற்றம் சாட்டுகிறார்களே?''

''இதைவிட ஒரு கற்பனையான குற்றச்சாட்டு இருக்க முடியாது. காதல் என்பது இரு தனி நபர்களுக்கு இடையிலான உணர்வு சார்ந்தது. இதைத் திட்டமிட்டு எப்படிச் செய்ய முடியும்? இந்தக் குற்றச்சாட்டை அறிவார்ந்த யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது கற்பனையான - விஷமத்தனமான குற்றச்சாட்டு!''

''ராமதாஸின் கடந்த காலச் செயல்பாடுகள் காரணமாகத்தான் அவருடன் இணைந்து செயல்படுவதாக இன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூடப் பேசினீர்கள். அப்படி இருக்கும்போது தருமபுரி வன்முறை நடந்த உடனேயே நீங்கள் இருவரும் கை கோத்து அங்கு நின்றிருக்க வேண்டாமா?''

''பா.ம.க-வினரும் வன்னியர் சங்கத் தினரும் வெளிப்படையாகத் திட்ட மிட்டு இந்த வன்முறையைத் தூண்டி இருக்கும்போது பா.ம.க. நிறுவனர் எப்படி என்னுடன் இணைந்து செயல் படுவார்? ஆனாலும், நான் வெளிப்படையாக அழைப்பு விடுத்தேன். ஆனால், அவரும் அவருடைய கட்சியினரும் 'இப்படித்தான் செய்வோம். இதற்கு எல்லாச் சாதிகளின், எல்லாக் கட்சிகளின் ஆதர வும் இருக்கிறது. இது தலித் துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்குமான பிரச்னை’ என்பதைப் போல பேசுகின்றனர்; செயல்படுகின்றனர். இந்த நாட்டில் வெறும் 19 சதவிகிதம் பேர்தான் தாழ்த்தப்பட்டவர்கள். மீதம் உள்ள 81 விழுக்காடு சாதி இந்துக்களைச் சிறுபான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் இந்த முயற்சி மிக, மிக ஆபத்தானது. இது எங்கே கொண்டுபோய்விடும் என்று தெரியவில்லை.''

''இந்தப் பிரச்னைக்குப் பிறகு ராமதாஸுடன் பேசினீர்களா?''
''நான் லண்டனில் இருந்தபோது, கோ.க.மணியி டம் பேசினேன். 'இந்த நிலைமையை வளரவிடக் கூடாது. எப்படியாவது அமைதிப்படுத்த வேண் டும்’ என்றேன். அவரும் மருத்துவரிடம் பேசு வதாகச் சொன்னார். லண்டனில் இருந்து திரும்பிய பிறகு பேச முடியவில்லை. அவர்களும் பேச வில்லை.''

''இனிவரும் காலங்களில் பா.ம.க-வுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவீர்களா?''

''அதைப் பற்றி பேச இது நேரம் இல்லை. கண்ணீரும் செந்நீருமாக கதறிக்கொண்டு இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களோடு களத்தில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தேர்தல் உறவுகளைப் பற்றிச் சிந்திக்க இப்போது நேரம் இல்லை!''

''தருமபுரி பிரச்னையில் தமிழ்த் தேசியவாதிகள், திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்டுகள்... இவர்களின் நிலைப்பாடு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?''

''தலித்துகள் மீது ஈவிரக்கமற்ற வன்கொடுமைகள் ஏவிவிடப்பட்ட எத்தனையோ சந்தர்ப்பங்களில், இவர்கள் மனசாட்சி இல்லாத அள வுக்கு அமைதி காத்திருக்கிறார்கள். ஆனால், தருமபுரி பிரச்னையில் கம்யூனிஸ்டுகள் உடனே களத்துக்கு வந்தனர். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்கூட துயர் துடைக்கும் நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால், 'தமிழராக ஒன்றுபடுவோம்’ என்கிற தமிழ்த் தேசியவாதிகள் மட்டும் தொடர்ந்து மௌனம் சாதிக்கிறார்கள். அவர்களுக்குச் சாதி ஒழிப்பைப் பற்றிய புரிதலோ, அக்கறையோ இல்லை. வெறும் மொழி உணர்வு, இன உணர்வை மட்டும் அடுக்குமொழியில் பேசி, செயல்படுகின்றனர். ஆனால், தமிழ்த் தேசியம் என்ற கொள்கைக்குச் சாதி ஒழிப்புதானே அடிப்படை? இந்தப் புரிதல் இல்லாத காரணத் தால்தான் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதும் சாதியவாதிகளின் பக்கம் சாய்கிறார்கள். ஈழத் தில் படுகொலை நடக்கும்போது கொந்தளிக்கும் இவர்கள், ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு சேரிகள் ஈழத்தைப் போல எரிந்துகொண்டு இருக்கும்போது கண்டும் காணாமல் இருப்பது ஏன்? மனிதநேயம் இருந்தால் இதையும் கண்டித்து களத்தில் இறங்க வேண்டும். இல்லை எனில் அவர்களின் ஈழ ஆதரவு நிலைபாட்டையே சந்தேகிக்க வேண்டி இருக்கும்!''

''தமிழ் சினிமாவில்தான் காதலை எதிர்ப்பதும், பிரிப்பதும் வில்லன்களின் வேலையாக இருக்கும். இப்போது டாக்டர் ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகளும் காதலுக்கு எதிராக நிற்கிறார்களே?''

''சமூக யதார்த்த நிலைமைகளுக்கு முரணான அணுகுமுறை இது. காதல் என்பதும் திருமணம் என்பதும் இயற்கையானவை. இதை எதிர்ப்போம், தடுப்போம் என்று கற்பனை உலகத்தில் வாழ்பவர்களால்தான் சொல்ல முடியும். 'மழையே வராமல் தடுப்போம், புயலே வராமல் தடுப்போம்’ என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்குமோ, அதேபோல்தான் காதலைத் தடுப்போம் என்று சொல்வதும். வில்லன்களை சினிமாவில் ரசிக்கலாம். அரசியலில் அல்ல!''

'''தமிழ்க்குடிதாங்கி என்று நீங்கள் ராமதாஸுக்கு வழங்கிய பட்டத்தை இப்போது வாபஸ் வாங்குவீர்களா?''

''தமிழ்க்குடிதாங்கி என்று பாராட்டியதும் அம்பேத்கர் விருது கொடுத்துப் புகழ்ந்ததும் மனப்பூர்வமாக நடந்ததுதான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேலும் அவர் துணை நிற்க வேண்டும் என்று நினைத்து அவரை ஊக்கபடுத்த அத்தகைய பாராட்டுகளை விடுதலைச் சிறுத்தைகள் வழங்கியது. மீண்டும் அதேபோன்ற சமூக நல்லிணக்கத்துக்காக அவர் பாடுபடும் நிலையில் பழைய மாதிரியே பாராட்டத் தவற மாட்டோம்!''

நன்றி : ஜீனியர் விகடன்

  • 28-நவம்பர்-2012

0 comments:

கருத்துரையிடுக